இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பணிக்கு செல்லும்போது, அவர்களது குழந்தைகளை
பராமரிப்பதற்காக, 27.3.2003 அன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகத்தை (Creche) திறந்து வைத்தார்கள். மேற்படி கட்டிடமானது பழுதடைந்ததால், தற்போதைய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி
அவர்கள் உத்தரவின்பேரில், புதுப்பேட்டை, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் உள்ளே ரூ.69.79 இலட்சத்தில் தரை தளம், முதல் தளம், பூங்கா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் கூடிய
குழந்தைகள் நல காப்பகம் கட்டப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 13.12.2019 அன்று மேற்படி குழந்தைகள் நல காப்பகத்தின் (Creche) புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள காவலர்களின் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் வழங்கினார்.மேற்படி குழந்தைகள் நல காப்பகம் மழலையர் பள்ளியாகவும் இயங்கும் எனவும், பணிக்கு செல்லும் பெண் காவல் ஆளிநர்கள் தங்களது குழந்தைகளை இக்குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்லலாம் எனவும், இங்கு குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், ஆரம்ப பாடங்கள் கற்றுக் கொடுக்கவும், நன்கு படித்த பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார். மேலும், பராமரிப்பு பணிக்காக இரண்டு ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் விளையாடுவதற்காக பூங்கா மற்றும் விளையாட்டு பொருட்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.கே.தர்மராஜன்,இ.கா.ப., ஆயுதப்படை துணை ஆணையாளர்கள்
திரு.கே.சௌந்தரராஜன், திரு.ஆர்.ரவிச்சந்திரன், மோட்டர் வாகனப்பிரிவு துணை ஆணையாளர் திரு.கேசோமசுந்தரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.