கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். பிப்ரவரி 28 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மக்கள் என அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்நிகழ்வில் வீடியோ வழியே Viacom 18 நிர்வாக அதிகாரி அஜித் அந்தேரி பேசியது: Viacom 18 மூலம் தனித்தன்மை மிக்க படங்கள் உருவாக்கவே நாங்கள் விரும்புகிறேம். எங்கள் நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்கள் செய்யவே விரும்புகிறோம் அந்த வகையில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. துல்கர் இப்படத்த்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு நன்றி. அவர் மூலம் தான் இந்தப்படம் கவனம் பெற்றது. தேசிங்கு பெரியசாமி மிகத்திறமை வாய்ந்தவர். படத்தை அவர் கையாண்டிருந்த விதம் மலைக்க வைத்தது. இப்படத்தை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசியது: நான் ஜெயிப்பேன் என நம்பி எனக்கு ஆதரவளித்த அம்மா அப்பாவுக்கு நன்றி. இப்படத்தை என்னை நம்பி தயாரித்த ஆண்ட்ரூ ஜோசப் அவர்களுக்கு நன்றி. சினிமா மீது என் கவனம் திரும்ப காரணமாயிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ஒரு புதியவனான என்னை பாரட்டி தள்ளிய பத்திரிக்கை மீடியா நண்பர்களுக்கு நன்றி. ஒரு படம் ஜெயித்தால் இத்தனை பாராட்டு கிடைக்குமா ? என நினைக்குமளவு பாரட்டு வழங்கிய அனைத்து திரை நண்பர்களுக்கும் நன்றி. இந்தப்படம் உருவாக காரணமாயிருந்த ஒரே நபராக துல்கர் அவர்களுக்கு நன்றி. அவர் ஒப்புக்கொண்டார் என்ற பிறகு தான் அனைத்துமே நடந்தது. என்னை நம்பி படத்தில் எதையும் மாற்றாமல் நடித்து கொடுத்ததற்கு நன்றி. ரிது வர்மா ஒரு வேறு மாநில பெண் போல இல்லாமல் ஒரு தமிழ் பெண் போலவே நடித்து கொடுத்ததற்கு நன்றி. ரக்‌ஷன் டீவி மூலம் ஏற்கனவே சாதித்து விட்டான். இப்படம் மூலம் நல்ல கவனம் பெற்றிருக்கிறான். அவனுக்கு வாழ்த்துகள். இப்படத்தில் கௌதம் மேனன் சாரை முதலில் யோசிக்கவில்லை. அப்புறம் அவர் தான் வேண்டும் என்று அவரை துரத்தி, துரத்தி தான் நடிக்க வைத்தோம். அவர் ஒத்துகொண்ட பிறகு தான் படத்தின் வெற்றி உறுதியானது. க்ளைமாக்ஸ் காட்சியை பயந்து பயந்து தான் அவரிடம் சொன்னேன். ஆனால் சூப்பராக இருக்குடா, என்று சொல்லி அவரே காபி ஷாப்பில் எடுக்கலாம் என்று சொல்லி, அவரே வசனமும் எழுதி, நடித்து தந்தார். புதியவர்களை ஆதாரிக்க பெரிய மனது வேண்டும். அவருக்கு நன்றி. பாஸ்கர் ஒளிப்பதிவாளராக மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும். அவரிடம் யாரும் கோபமே பட முடியாது அவ்வளவு நல்லவர். பிரவீன் ஆண்டனி படத்தின் மாண்டேஜ்ஜை சுவாரஸ்யமாக மாற்றியவர் அவர்தான். அவருக்கு நன்றி. படத்தில் எதை பற்றியும் கவலைப்படமால் இருக்க வைத்த கலை இயக்குனருக்கு நன்றி. ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் படத்திற்கு இசை மூலம் உயிரூட்டியவரகள். அவர்களுக்கு நன்றி. மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அவரால் தான் இந்தக்கதை படமாக மாறியது. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் 90 நிமிடத்திற்கு மேல் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இருக்கிறது. கொஞ்சம் கூட சிஜி போல் தெரியாமல் படத்தை உருவாக்கி தந்த அவர்களுக்கு நன்றி. இது நன்றி சொல்லும் நேரம். நான் இன்று சினிமாவில் இருக்க காரணமாயிருக்கும் விஜய் மில்டன் சாருக்கு நன்றி. நேரம் ஒதுக்கி வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

நடிகை நிரஞ்சனி பேசியது: சினிமாவை அறிமுகப்படுத்திய அப்பாவுக்கு நன்றி. மீடியாவால் தான் இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளது. உங்களுக்கு நன்றி. ரசிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது. துல்கர் ரொம்ப இனிமையான நபர். மிக எளிமையாக பழகினார். ரிது என்னை நண்பியாக பாவித்து அரவணைத்ததற்கு அவருக்கு நன்றி. படத்தில் என்னை எல்ல்லோருக்கும் பிடிக்க ரக்‌ஷன் தான் காரணம் அவருக்கு நன்றி. கௌதம் சார் இந்தபடத்தை ஒத்துகொண்டு நடித்ததற்கு, தனிப்பட்ட முறையில் என்னை பாரட்டியதற்கு நன்றி. இயக்குநருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. என்னை ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியது: இது எனக்கு முதல் படம். தேசிங்கு அண்ணனுக்கு நன்றி. துல்கர் படத்தில் நடிக்கிறோம் என்று தான் முதலில் இந்தப்படத்தில் நடிக்கவே ஆசைப்பட்டேன். துல்கருக்கு நன்றி. என்னை எல்லா காட்சிகளிலும் விட்டு கொடுக்காமல் கூடவே நிப்பாட்டி நடிக்க வைத்தார். பாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. திரையில் என்னை பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாக இருந்தது. கௌதம் சாருடன் முதல் முதலாக அறிமுகமானபோதே என்னை வாழ்த்தினார். “ஹாய் ஹீரோ” என்று சொல்வார். எதுவுமே பேசாமலே படத்தில் மிரட்டியுள்ளார். ரிது வர்மா என்னை நண்பனாக பொறுத்து கொண்டதற்கு நன்றி. நிரஞ்சனி படப்பிடிப்பில் கேரக்டர் போலவே என்னை கண்டு கொள்ளவே மாட்டார். பத்திரிக்கை நண்பர்களுக்கும் படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது: இன்று என் பெயர் வெளிவர காரணமான என் குரு விஜய் மில்டன் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒளிப்பதிவை மதித்து எல்லா இடத்திலும் பாராட்டியவர்களுக்கு நன்றி. எங்கள் குழுவுக்கு கடுமையாக உழைத்ததற்கு நன்றி. கௌதம் சார் எப்படியாவது இப்படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் இப்படத்தில் நடித்தற்கு நன்றி. அவர் வந்த பிறகு நிறைய பயந்தேன் ஆனால் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார். தேசிங்கு இன்னும் பெரிய இடங்களுக்கு செல்வார். படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நாயகி ரிது வர்மா பேசியது: “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” மறக்க முடியாத இனிமையான பயணம். தெசிங்கின் ஐந்து வருட பயணம் இந்தப்படம் அணுஅணுவாக ரசித்து உருவாக்கியுள்ளார். கௌதம் சாருக்கு நான் ரசிகை அவருடன் நடித்தது மகிழ்ச்சி. துல்கர் நான் நன்றாக நடிக்க காரணம் அவர் தான். தர்ஷன் கலக்கி விட்டார். நிரஞ்சனா நல்ல நண்பியாக மாறிவிட்டார். இப்படத்தை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கௌதம் மேனன் பேசியது: இந்தப்படத்தை எல்லா இடத்திலும் கொண்டு சேர்த்த மீடியா நண்பர்களுக்கு நன்றி. நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்கில் இந்த படம் மூலம் மேஜிக் நடந்திருக்கிறது. இதை சாதித்த படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் படங்களில் இருக்கும் உணர்வு தேசிங்குவிடம் கிடைத்தது. அதனால் தான் இந்தப்படம் நடித்தேன். எனக்கு பிடிக்காவிட்டால் நான் எந்தப்படத்திலும் நடிக்க மாட்டேன். எனக்கு பிடித்து தான் இந்தபடத்தில் நடித்தேன். கேமரா முன்னாடி நடிப்பதில் எனக்கு பயம் தான். ஆனால் அந்த பயத்தை போக்கியது விஜய் மில்டன் தான். அவர் எனக்கு ஒரு கதவை திறந்து விட்டுள்ளார். துல்கர் இந்தப்டத்தில் சூப்பராக இருந்தார். ரிது, நிரஞ்சனி, தர்ஷன் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.

துல்கர் சல்மான் பேசியது: ரொம்பவும் உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது. தேசிங்கு ஐந்து வருடமாக உழைத்துள்ளார். நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் மிக உண்மையாக சினிமாவை நேசிப்பவர். இங்கு எல்லோருமே நல்ல மனதுக்காரர்கள். தான் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. எல்லோரும் எல்லோரையும் பாரட்டுவது நிஜம். இந்தப்படம் அனைவர் மீதும் அன்பை சேர்த்துள்ளது. எல்லோரும் இதை அவர்களது படமாக கொண்டாடுகிறார்கள் தேசிங்கிற்கு நன்றி. இன்னும் பத்து வருடத்தில் தேசிங்கு மிகப்பெரிய ஆளாகிவிடுவார். தர்ஷன் ஹீரோவாகிவிடுவார் 10 வருடம் கழித்து சந்தித்தால் இந்தப்படத்தை பற்றி பேசுவோம் எனத் தோன்றுகிறது. மனதளவில் என்னை அதிகம் பாதித்துள்ளது இந்தப்படம். இந்தபடத்தில் கௌதம் சார் தான் ஹீரோ. அவரை திரையில் பார்த்து நானும் கைதட்டி ரசித்தேன். அவர் ஆசிர்வாதம் தான் இந்தப்படம். ரிது சினிமாவுக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். நிறைய உழைத்திருக்கிறார். அவர் கண்ணிலேயே நடிக்கிறார். வாழ்த்துக்கள். நிரஞ்சனி நிறைய தயக்கத்துடன் இருந்தார் இந்தப்படத்தின் வெற்றியில் அவர் நிறைய மாறியுள்ளார். ரக்‌ஷன் என் நெருங்கிய நண்பனாக மாறி விட்டார். அவர் மிக எளிதாக ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். தொழில் நுட்ப கலைஞர்கள் எங்களை விட அதிகம் உழைப்பவர்கள் அவர்கள் தான் அவர்களுக்கு நன்றி. மீடியா நண்பர்கள் அவர்கள் படம் போல் இந்தபடத்தை எடுத்து கொண்டாடியதற்கு நன்றி.