செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழந்த நாகபட்டினம், சன் டிவி செய்தியாளர் திரு.ஜான் கென்னடி குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செயலாகும். நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த 5 மாத காலமாக கொரானா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை உருவாக்கியதில் அச்சு மற்றும் மின்னணு ஊடகச் செய்தியாளார்கள் மிகப் பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபடும் செய்தியாளர்கள், முகக் கவசம் போடுவது. கையுறை அணிவது. சானிடைசர் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றினாலும், இவர்களது பணி பாதுகாப்பற்ற நிலை யிலேயே தொடர்கிறது. இதழாளர்கள் பணிநிலை, ஊதியம், இதர சமூக பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து அரசு அமைத்த பல உயர்மட்ட குழுக்கள் பல்வேறு ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்கியுள்ளன. ஆனால் பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இந்தப் பரிந்துரைகளை செயல் படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை. ‘சுதந்திர செய்தியாளர்கள்’ என்ற பெயரில் பாதுகாப்பற்ற நிலையில் தான் ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதனைக் கருத் தில் கொண்டு கொரானா பாதிப்பிலும், பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து களிலும் உயிரிழந்த செய்தியாளர்கள் குடும்பத்துக்கு குறைந்த பட்சம் தலா ருபாய் 25 லட்சம் நிவாரண நிதி வழங்கி, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசில் நிரந்தரப் பணியும் வழங்க வேண்டும் என தமிழ் நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.