பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து மக்களிடையே அச்சம், பீதி ஏற்பட்டு வருகின்றன. இதனால் சமூக இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. சூலை மாதம் ஆகியும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. பல தனியார் கல்விக் கூடங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதே வகையில் தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் 2 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கும் திட்டத்திற்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டாலும் கொரோனா பாதிக்கப்பட்ட இந்த சூழலில் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 15 நிமிடங்கள் இடைவெளி என்று ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆக மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு போய் கல்வி கற்கும் நேரத்தை விட ஆன்லைன் மூலம் கல்வி கற்பது குறைவான நேரமாக இருந்தாலும் இது தவிர்க்க முடியாதது ஆகும்.

இத்தகைய சூழலில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தாண்டு மட்டும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த வகையில் குறைக்கலாம் என்று ஆலோசனைகள் கோரப்பட்டிருந்தது. 1500 க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்படி, 30 சதவிகித பாடத்திட்டங்களை குறைப்பதென மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறது. பாடத்திட்டத்தை குறைக்கின்றோம் என்ற முயற்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை, சமூகநீதி ஆகிய பாடங்களை நீக்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதற்கெதிராக கடும் கண்டன எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளன.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு மேற்கண்ட பாடங்களை படிப்பது மிக மிக அவசியமாகும். எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவதற்கு இத்தகைய பாடத்திட்டங்கள் பெருமளவில் உதவும் என்கிற கருத்துக்கு மாறாக மத்திய அரசு இத்தகைய பாடங்களை நீக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பொதுவாக மாணவர்களின் பாடத்திட்டங்களில் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துக்களை நீக்குவது, தேவையற்ற கருத்துக்களை புகுத்துவது தவறான விளைவுகளையே ஏற்படுத்தும். இதனால் இளம் வயதிலேயே மாணவர்கள் சரியான தயாரிப்பும், புரிதலும் இல்லாமல் படிக்க வேண்டிய பாடங்களை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் தவறான குடிமக்களை உருவாக்குகிற தீமை ஏற்படும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட மாணவர்கள் அவசியம் படிக்கின்றன ஜனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை, சமூகநீதி போன்றவற்றை வலியுறுத்துகிற பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.