கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் – முத்தரசன்

கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது முதன்மை யானது என்பது தொல்லியல் ஆதாரப்பூர்வ உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொடு மணல், அழகன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆதாரங்களை விடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கற்றறியும் நிலையில் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் கட்ட ஆய்வுகளை தொகுத்து, அதில் கிடைத்த ஆதாரப் பொருட்களுடன் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நூல் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

கீழடி அகழாய்வுப் பணி பல்வேறு தடைகளை தாண்டியும், அதனை முழுமைப் படாமல் முடக்கி விடும் முயற்சிகளையும், மத்திய அரசின் அதிகார அழுத்தங் களையும் எதிர் கொண்டும் சாதனை படைத்து முன்னேறுகிறது. கீழடி அகழாய்வுப் பணிகள் சர்வதேச தரத்தில் ஆய்வு செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டு கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங் காட்சியகமாக அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.