டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேதாரண்யம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப் பட்டதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்று சிறப்பித்த வேதாரண்யம் நகரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் மிகுந்த கவலை அளிக்கிறது. நகர பேருந்து நிலையம் அருகில், காவல் நிலையம் எதிரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அன்னலின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இத்தகைய நிலையில் இரு தரப்பினர் மோதலை பயன்படுத்தி டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்து தகர்த்துள்ளனர். இத்தகைய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிப்பதுடன், இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்.வன்முறை செயல்கள் ஒடுக்கப்படுவதுடன், அமைதி திரும்பவும், சுமுகமான சூழ்நிலை உருவாகவும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சுமுகநிலை உருவாக அனைத்து தரப்பினரும் முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
அன்புள்ள
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்