தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் முற்றாக மூடப்பட்ட நிலையில் 9-ம் வகுப்பிற்கான தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டு பின்னர் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொது ஊரடங்கு நீடித்த நிலையில், பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் ஒன்று என்றும், பின்னர் ஜூன் 15ல் நடந்தே தீரும் என்றும் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஊரடங்கு நீடிக்கின்றது. கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரிக்கின்றது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியம் அல்ல, அதனை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள், பெற்றோர்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் என பலரும் வலியுறுத்திய போதும் கல்வி அமைச்சர் நிராகரித்து விட்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு என தமிழ்நாடு அரசை பார்த்து நீதிமன்றம் கடுமையான குரலில் கேள்வி எழுப்பியது. அதன் பின்னர் முதலமைச்சர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகின்றது என்றும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அறிவித்தார். பின்னர் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவித்து, பெரும் குழப்பம் நிலவி, தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை கல்வி நிலையங்களுக்கு அழைத்து தேர்வு நடத்தியது அம்பலமாக, பின்னர் அவை அரசால் மறுக்கப்பட்டது. தொடர்ச்சியாக குழப்பங்கள் ஏற்பட்டு, ஒவ்வொரு குழப்பங்களும் முடிவுற்ற நிலையில் தற்போது தேர்வுத் துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு நீண்ட நாள் வராதவர்கள், பாதியில் நின்று மாற்று சான்றிதழ் பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் உள்ளிட்டோரை கணக்கிட்டு அவர்களின் விபரங்களை தனியாக சேகரிக்க வேண்டும். இந்த மாணவர்களின் விபரங்கள் எந்த காரணத் திற்காகவும் பத்தாம் வகுப்பு, தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போன மாணவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறக் கூடாது என்று கூறுவது வியப்பாக உள்ளது. மாணவர் இறந்து விட்டால் அவரது பெயர் முற்றிலுமாக நீக்கப்பட்ட நிலையில், அவர் பெயர் இடம் பெற்றுவிடக் கூடாது என்று கூற வேண்டுமா? வருகை பதிவில் குறைபாடுகள் இருக்கலாம். உடல்நலக் குறைவு, குடும்ப பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பது இயல்பு. அதனைக் காரணம் காட்டி அவர் தேர்ச்சிக்குரியவர் அல்ல என்று கூறுவது பொறுத்தமற்ற காரணம் ஆகும். காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வது எதார்த்தத்திற்கு புறம்பானது. ஒரு மாணவர் காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கலாம். அதே மாணவர் முழுஆண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கவும் வாய்ப்புண்டு. அதே போன்று காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் முழு ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.ஆதலால், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேடு இவைகளை எல்லாம் கணக்கில் கொள்ளாது. இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து குழப்பங்களை போக்கிட வேண்டுகிறோம். கல்வித்துறையில் குழப்பங்கள் தொடர்ச்சியாக நீடித்து வருவது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. உண்மையில் கல்வித்துறையை இயக்குவது யார் என்கிற கேள்வி எழுகின்றது. இத்தகைய கேள்விகளுக்கு இடம் அளிக்காது, தெளிவான முடிவுகள் மேற்கொண்டு, உறுதியாக நிறைவேற்றிட வேண்டுமென, தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.