வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது – இரா.முத்தரசன்

சமையலில் மிக முக்கிய பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு கண்டிராத வகையில் என்றுமில்லாத அளவில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்கள் வெங்காயம் வாங்க முடியாத பொருளாகி விட்டது. வெங்காயத்தை உரித்தால்தான் கண்களில் தண்ணீர் வரும் என்ற நிலை மாறி, விலையைக் கேட்டாலே கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெங்காயம் பயன்படுத்துவது ஏழைக் குடும்பம், நடுத்தர குடும்பம் செல்வந்தர் குடும்பம் என்கிற பாகுபாடு இன்றி, அனைத்து தரப்பு குடும்பங்களும் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வெங்காயம் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வெங்காயத்தை தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து, விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு பாராட்டுக்கள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு.திரிபாதி அவர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
காவல்துறையில் அனைத்து கடிதங்கள், சுற்றறிக்கைகள், அனைத்தும் தமிழில் வெளியிடப்பட வேண்டும், அனைவரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என காவல்துறை தலைவர் திரு.திரிபாதி உத்தரவு இட்டு இருப்பதை வரவேற்று, பாராட்டுகின்றோம். காவல்துறை தலைவரின் உத்திரவை முன்மாதிரியாகக் கொண்டு, அரசின் பிற துறைகளிலும் முழு அளவில் தாய் மொழியாம் தமிழில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.