இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவிட்-2

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸ் அதிகம் பரவக் கூடியதாகவும், இளைஞர்களை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் மாறுபாடு, 17 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது ஸ்பைக் புரதத்தில் உள்ள என்501ஒய் மாற்றம். இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம். எனவே, இதற்கான தொற்று நோயியல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நுழைவுப் பகுதி மற்றும் கடந்த 4 வாரங்களில் ( நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை) இங்கிலாந்திலிருந்து அல்லது இங்கிலாந்து வழியாக மாறி வந்த சர்வதேசப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்ட எஸ்ஓபி விவரிக்கிறது. இவர்களிடம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேணடும் என எஸ்ஓபி-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இங்கிலாந்து விமான நிலையங்களில் இருந்து, மற்றும் இங்கிலாந்து விமான நிலையங்கள் வழியாக மாறி இந்தியா வரும் அனைத்துப் பயணிகளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறிப்பட்டால், அவர்களுக்கு ஸ்பைக் மரபணு அடிப்படையிலான ஆர்-பிசிஆர் பரிசோதனை செய்யப் பரிந்துரைக் கப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள், அந்தந்த மாநில சுகாதாரத்துறை ஒருங்கிணைப்புடன் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களின் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையம் அல்லது அதே போன்ற இதர மையங்களுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனையில், புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறிப்பட்டால், அவர்கள் சிறப்புத் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ நெறிமுறைகளின் படி சிகிச்சை அளிக்கப்படும். விமான நிலையத்தில் நடத்தப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்றால் அவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவர். பயணிகள் சோதனைக்குச் செல்லும் முன்பாக எஸ்ஓபி குறித்து விளக்கப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் விமானத்துக்குள்ளும் தெரிவிக்கப்பட வேண்டும்.

கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்த வந்த பயணிகள் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படுவர். கடந்த 4 வாரங்களில் இங்கிலாந்தில் இருந்தும், இங்கிலாந்து விமான நிலையங்கள் மூலமாக விமானம் மாறியும் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிப்பட்டுக் கண்காணிக்கப்படுவதை மாநில அரசுகள்/ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்ட அதிகாரிகள் உறுதி செய்வர். அவர்களும் மருத்துவ நெறிமுறைப்படி சோதனை செய்யப்படுவர். அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறிப்பட்டால் அவர்களும் சிறப்புத் தனிமை மையங்களில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.