இந்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாகப் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள், ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையே 6-வது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனிடையே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த 14-ம் தேதி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்குக் கடிதம் எழுதினார். அதில், “விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான ஹரிபாபு பாக்டே அன்னா ஹசாரேவைக் கடந்த வாரம் நேரில் சந்தித்து, வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 8-ம் தேதி விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட பாரத் பந்த் போராட்டத்தின்போதும், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள மாலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரே இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு அவர்களின் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. விவசாயிகளுக்கு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆதலால், எனக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது. என்னிடம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளார்கள். ஆதலால், 2021-ம் ஆண்டு ஜனவரி வரை நான் அவகாசம் அளித்திருக்கிறேன். அதன் பின்பும் என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசிப் போராட்டமாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.