டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார் முதல்வர் கேஜ்ரிவால்

டெல்லி மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இன்று பேசிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது எனக் கூறி, வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்தார்.அடெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2500 கோடி முறைகேடு நடந்தது குறித்து ஆலோசிக்கவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூடியதும் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் பேசினர். மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைக்க விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது? இதுவரை 20 நாட்கள் போராட்டத்தில் 20 விவசாயிகள் உயிரிழந்துவிட்டார்கள். உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியும் பகத்சிங் போன்றவர்தான். வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவாயிகளிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அவர்களின் நிலம் அவர்களிடம் பறிக்கப்படாது என்கிறார். இதுவா விவசாயிகள் பயன்பெறுவது? நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டபோது, அவசரமாக இந்த மசோதாக்களை சட்டமாக்க என்ன அவசியம்? மாநிலங்களவையில் விவாதத்துக்குச் செல்லாமல் முதல் முறையாக இந்த 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம் எனக்கு வேதனையைத் தருகிறது. நான் இந்தச் சட்டங்களை ஆதரிக்க முடியாது. என் தேசத்தின் விவசாயிகளுக்கு நான் துரோகம் செய்ய முடியாது. மழையிலும், 2 டிகிரி குளிரிலும், சாலையிலும், தெருக்களிலும் படுத்துப் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது. இந்த வேளாண் சட்டங்களின் நகல்களைச் சட்டப்பேரவையில் கிழித்து எறிகிறேன். (வேளாண் சட்டங்களின் நகல்களை கேஜ்ரிவால் கிழித்து எறிந்தார்) நான் இந்த தேசத்தின் குடிமகனாக முதலில் இருக்க வேண்டும். அதன்பின் முதல்வராக இருக்கிறேன். இந்தச் சட்டப்பேரவை, வேளாண் சட்டங்களை நிராகரிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். 20 விவசாயிகள் உயிரிழந்துவிட்டார்கள். எப்போது மத்திய அரசு விழித்துக்கொள்ளப் போகிறது? ஆங்கிலேயர் காலத்தில் 1907-ல் சில சட்டங்களைத் திரும்பப் பெற 9 மாதங்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள் என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது”. இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.