மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 17ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழமையான கேசவ் தேவ் கோயிலின் அரச்சகர் பவான் குமார் சாஸ்திரி சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு ஷாகி ஈத்கா மசூதி நிர்வாகம் மட்டுமின்றி, லக்னோ சன்னி வக்பு வாரியம், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளை உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயில், ஸ்ரீ கிருஷ்ணா சேவா சனஸ்தான் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு வழக்கறிஞர் சஞ்சய் கவுர் கூறுகையில் “இந்த வழக்கு விசாரணைக்கு  உகந்தது என்று ஏற்றுக் கொண்டு, விரிவான விசாரணைக்கு வழக்கோடு தொடர்புடைய 4 பிரிவினருக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கின் விசாரணை மார்ச் 8-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் 4 பிரிவினரும் பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது “இந்த மனுவில் பவன் சாஸ்திரி 3 கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் முதலாவது கேசவ் தேவ் கோயிலுக்குச் சொந்த மான 12.37 ஏக்கர் நிலம், அதாவது தற்போது ஷாகி ஈத்கா மசூதி இருக்கும் இடமும் கோயிலுக்குச் சொந்தமானது அதை கோயில் நிர்வாகத்துக்கு பெற்றுத் தர வேண்டும். ஒட்டுமொத்த கோயில் வளாகத்தையும் நிர்வகிக்க தனக்கு அதிகாரம் உண்டு தன்னுடைய முன்னோர்கள் இந்தக் கோயிலின் அர்ச்சகர்களாக சேவை செய்தார்கள் என்பதால், பரம்பரை உரிமையாக, கோயில் அர்ச்சகராக பணியாற்ற உரிமை இருக்கிறது. 2-வதாக கடந்த 1967-ம் ஆண்டு மதுரா நீதிமன்றம், அளித்த தீர்ப்பான ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சனஸ்தான் அருகே மசூதி இருக்க அனுமதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். 3-வது கோரிக்கையாக, மசூதியை கோயிலுக்குச் சொந்தமான இடத்திலிருந்து அகற்ற ஷாகி ஈத்கா மசூதி நிர்வாகத்துக்கும், லக்னோ வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு தவிர, ஏற்கெனவே 3 மனுக்கள் மதுரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.