வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யப்படலாமே தவிர திரும்பப் பெறமாட்டோமென்கிறார் வேளாண்துறை அமைச்சர்

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை. விவசாயிகளின் போராட்டம், கோரிக்கைக் காரணமாக, தேவைப்பட்டால் அதில் திருத்தங்கள் செய்யலாம் என்று மத்திய வேளாண்துறை இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், 10-வது நாளாக நடத்தும் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வரும் 8-ம் தேதி விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் மத்திய வேளாண்துறை இணைஅமைச்சசர் கைலாஷ் சவுத்ரி இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகள் நலனுக்காக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம். இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என நாங்கள் கூறிவருகிறோம். இதைத்தான் சுவாமிநாதன் கமிட்டியும் பரிந்துரைத்துள்ளது. ஆதலால், விவசாயிகளின் நலனுக்காகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப் பெறும் என நான் நினைக்கவில்லை. விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் காரணமாக, தேவைப்பட்டால், வேளாண் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளலாம். நான் மீண்டும் சொல்கிறேன், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். இதை அரசு எழுத்துபூர்வமாக உறுதியளிக்கவும் தயாராக இருக்கிறது.
விவசாயிகளை தூண்டிவிடுவதற்கு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள்தான் எரியும் தீயில் மேலும் நெய்யை வார்க்கிறார்கள். தங்கள் விவசாய நிலங்களில் உண்மையிலேயே பணியாற்றிவரும் விவசாயிகள் இந்த 3 சட்டங்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. போராட்டம் நடத்துவோர் அரசியல் லாபத்துக்காக நடத்துகிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையின் மீதும், விவசாயிகள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாட்டில் அமைதியற்ற சூழல் எங்கும் உருவாகும் வகையில் விவசாயிகள் எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். இந்த விவகாரம் எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது என்பதை விவசாயிகள் சிந்திக்க வேண்டும்.அரசியல் லாபத்துக்காக சிலர் செய்யும் செயலுக்கு துணை போய்விடக் கூடாது. இவ்வாறு கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.