இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அறிவிப்பு மணிப்பூர் கலவரப் பகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் ஆய்வு சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், சர்வசமயத் தலைவர்களுடன் சந்திப்பு

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் சமூக நல்லிணத்துடன் வாழ வேண்டும். அந்த மாநிலம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி விரும்புகிறது.
 
இந்நிலையில், கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தற்போது உள்ள நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கள ஆய்வு குழு கடந்த 10ஆம் தேதி மணிப்பூருக்கு சென்றது.
 
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு சேர்மன் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் தலைமையில் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., மூத்த துணைத்தலைவர் எம்.பி.அப்துஸ் சமத் சமதானி எம்.பி., நாடாளுமன்ற கொறடா கே.நவாஸ் கனி எம்.பி., தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர்  ஜூலை 10, 11 ஆகிய இரு தினங்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மணிப்பூர் ஆளுநர் அனுசுயா யுகி, இம்பால் ஆர்ச் பிஷப் டொமினிக் லுமோன் ஆகியோரையும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் தோன்ஜு கேந்திரா நிவாரண முகாம், குமான் லுப்பக் நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று ஆறுதலை கூறியதோடு, அனைத்து விவரங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழுத் தலைவர் சையத் சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் தலைமையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு வினர் கேட்டறிந் தனர்.
தொடர்ந்து ஜூலை 11-ஆம் தேதி காலை 20-க்கும் மேற்பட்ட மணிப்பூர் திருத்தேவ சங்கம், புத்தமத சங்கம், மெய்தி கிறிஸ்தவ ஆலயங்களின் கவுன்சில் மற்றும் பல்சமய அமைப்பினர்கள் நடத்திய அமைதி பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் பங்கேற்று மணிப்பூரில் அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம் ஏற்பட அனைத்து நிலைகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும் என உறுதியளித்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழும் இம்பால் பகுதியில் வாழக்கூடிய இஸ்லாமிய மக்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைதி குழுவினர் சந்தித்ததோடு கல்வி அறிவில் சிறுபான்மை முஸ்லிம்கள் பின்தங்கியுள்ள மணிப்பூர் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்றும் என உறுதியளிக்கப்பட்டது.
மணிப்பூரில் நிலவிவரும் அனைத்து தகவல்களையும் நேரில் கண்டறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் நேற்று (11-07-2023) இரவு தலைநகர் டெல்லி திரும்பி செய்தி யாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்ததோடு, ஒன்றிய இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் ஜூலை 20-ஆம் தேதி கூட உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் மக்களின் உரிமைக்காக குரலெழுப்புவார்கள் என தேசிய அரசியல் ஆலோசனைக் குழு சேர்மன் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.