“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” கொள்கையை பரப்புவதே எங்களின் நோக்கம் – மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி

இந்த புத்தக வெளியீட்டு விழாவின் மூலமாக உங்கள் அனைவரையும் இங்கு காண்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில் இந்த விழாவை நீங்கள் சிறப்பித்து கொடுத்ததற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாகவும், ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் எனது நன்றியையும் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனுஜோதி அசிரமமானது 1963-ம் வருடம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. இது எதற்காக ஸ்தாபிக்கப்பட்டது  என்றால், “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!” என்ற கொள்கையை இந்த உலகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டும். ஜாதி, மத, இன, மொழி, வேறுபாடு இல்லாமல் நாம் கடவுளை தொழுது கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அசிரமமானது நிறுவப்பட்டது. அதேபோல் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைய தலைமுறையினர் கடவுளைப்பற்றி இலவசமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும், எங்கள் அசிரமத்தினுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்தியாவில் அநேக ஜாதிகளின் மூலமாகவும், மதங்களின் மூலமாகவும் நாம் பிரிந்திருந்தாலும், நாம் இந்தியர்கள் என்பதில் ஒருமைப்பட்ட மக்களாக இன்றைக்கு நாம் இருக்கிறோம். ஆதியில் இருந்தே இந்தியா ஒரு புண்ணிய பூமியாகவும், இங்கே ஒரு பக்தி நிறைந்த நாடாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா தான் உலகம் முழுவதற்கும் சத்திய மார்க்கத்தை காண்பித்த ஒரு நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் இந்தியாவிலே மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்ற மக்கள் முயற்சிக்கின்றனர், ஆனால் ஒரு காலத்தில் இந்தியா தான் தன்னுடைய பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை உலகம் முழுவதிலும் பரப்பியது என்பதை இன்றைய தலமுறையினர் மறந்துவிட்டனர். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், காலையிலையே கடவுளை தொழுது கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடன் இருக்கக்கூடிய ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும். எந்த ஒரு நாட்டிலும் நாம் அவ்விதமாக காண முடியாது. காரணம் என்னவென்றால் காலையிலே நாம் இங்கு கோவில்களில் கடவுளை குறித்த பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடியும். மசூதியில் தொழுகை குறித்த காரியத்தை அவர்கள் செய்வதை நாம் காண முடியும். அதே போல் கிறிஸ்தவ ஆலையங்களிலும் அவர்கள் காலையிலேயே எழுந்து அங்கே கடவுளைக் குறித்து தொழுதுகொள்வதை நாம் பார்க்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு ஆன்மீக பூமியாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் நாம் எதில் பிரிந்திருக்கிறோம்? நாம் கடவுளை மறந்து விட்டு நம்முடைய சில பெருமையினிமித்தமாக நாம் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால் எல்லா வேதங்களையும் எல்லோரும் படிக்க வேண்டும். எல்லா வேதங்களும், பைபிள், பகவத்கீதை, குர்-ஆன் எல்லாம் அன்பைத்தான் போதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார்கள். அதை நாங்கள் இன்றைக்கு இலவசமாக மக்களுக்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறோம். ஆகவே இன்றைக்கு அன்னதானம் செய்கிறதை நாம் காண முடியும். ஆனால் நாங்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தின் மூலமாக, மக்களுக்கு கடவுளைக் குறித்த அறிவு தானத்தை இன்றைக்கு, இலவசமாக செய்து கொண்டிருக்கிறோம். இதை எடுத்து செல்வதற்கு, அநேக உங்களைப்போன்ற பெரியவர்கள் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பதற்காக இந்நேரத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த “விமுக்தி கா ரஹஸ்யா” என்ற இந்த புத்தகத்தை என்னுடைய தந்தை அவர்கள் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். இதை அநேக மொழிகளில் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். இன்றைக்கு இந்த பிலாயில் இதை உங்கள் முன்பாக ஹிந்தியில் வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆகவே இந்த புத்தகத்தை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் நீங்கள் கொண்டு சென்று சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மனுஜோதி அசிரமமானது இந்த காரியத்தை இங்கே செய்து கொண்டிருக்கிறது. அதேபோல் எங்களுடைய அழைப்பிற்கிணங்கி தங்களுக்கு அநேக வேலைகள் இருந்தாலும் வந்து எங்கள் விழாவினை சிறப்பித்து கொடுத்ததற்காக, மேடையில் வீற்றிருக்க கூடிய எல்லா பெரியவர்களுக்கும் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாகவும், ஸ்ரீ தேவாசீர் லாறி அவர்களுடைய குடும்பத்தின் சார்பாகவும் என்னுடைய வாழ்த்துதல்களையும், நன்றியையும் கூறிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ!