அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு – கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் எம்.எச் ஜவாஹிருல்லா

தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது சரியான நடவடிக்கை தான் என்று உறுதி செய்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 2007ல் முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2009ல் விழும்பிலும் விழும்பில் வாழும் அருந்ததியின மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கலைஞர் அரசு வழங்கியது. இது தொடர் பாகக் கலைஞர் அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கு கொண்டு அருந்ததியின மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மான த்திற்கு ஆதரவாக நான் உரையாற்றினேன். கடந்த 14வது சட்டமன்றத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்டுள்ள தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்து வர் கிருஷ்ணசாமி பலமுறை எடுத்த முயற்சிகளுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்புகளை மனிதநேய மக்கள் கட்சி பதிவு செய்தது. ஒரு மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு அளிக்க அதிகாரம் உண்டு என்று இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கலைஞர் தலைமையிலான திமுக அரசின் நடவடிக்கை சரியானது தான் என்பதை மெய்ப்பித்துள்ளது. இது சமூக நீதியை வலுப்படுத்தும் தீர்ப்பாகும்.