ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவரது தாயை தாக்கிய நபர் கைது.

ஆயிரம்விளக்கு பகுதியில் வசித்து வரும் 13வயது சிறுமி நேற்று 13.06.2024
காலை கீரிம்ஸ்ரோடு, IDBI வங்கி அருகில் நடந்துசென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வன் என்பவர் மேற்படி சிறுமியை வழிமறித்து தகாத முறையில் நடக்க முயன்றபோது, சிறுமி சத்தம்போட்டுள்ளார்.  மேலும் சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாய் மேற்படி தமிழ்செல்வனிடம் கேட்டபோது, அந்தப்பெண்ணிடம் தகராறு செய்து அவரை
உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்செல்வன், வ/32, த/பெ.காந்தி, எண்.18/29, அழகிரி நகர், ஆயிரம்விளக்கு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளதும், இவர் F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு
குற்றவாளி என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (13.06.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.