இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1056 மாணாக்க;களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் 26.08.2019 பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் 15 பள்ளிகளைச் சார்ந்த 1056 மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 1.30 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசன் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ் அவர்கள் விழாவிற்கு முன்னிலை வகித்தார். குறிப்பாக திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 668 மாணவ மாணவியர்களுக்கு ரூ.82.63 இலட்சம் மதிப்பிலும் ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 7 பள்ளிகளைச் சேர்ந்த 388 மாணவ மாணவியர்களுக்கு ரூ.47.99 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 15 பள்ளிகளைச் சார்ந்த 1056 மாணாக்கர்களுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் மாணவ மாணவியரின் நலனுக்காக 14 விதமான அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விலையில்லா மிதிவண்டிகள் விலையில்லா மடிக்கணினிகள் வழங்குதல் விலையில்லா பாடப்புத்தகம் நோட்டு புத்தகம் சீருடை காலணிகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 1528 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 2.34 இலட்சம் மாணவ
மாணவியர்கள் அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவரை 61746 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த 1056 மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாணவ மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக கல்வி சார்ந்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக புதிய கல்வி தொலைக்காட்சி தளத்தை துவக்கி வைத்துள்ளார்கள். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வசதிக்காக அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் மாணவ மாணவியர்கள் கல்வி அறிவோடு சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்றுப்புறத்தூய்மை பாதுகாத்திட வேண்டும். ஒழுக்கத்துடன் கல்வி பயின்று பெற்றோர் உள்ளிட்ட மூத்தவர்கள் அனைவரையும் மதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.

முன்னதாக திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்றைய தினம் 26.08.2019 நடைபெற்ற விழாவின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாணவ மாணவியர்களின் நலனுக்காக கல்வி சார்ந்த ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு புதிதாக துவக்கி வைக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி தளத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கருணாஸ் அவர்கள் ஆகியோர் மாணவ மாணவியர்களுடன் சேர்ந்து பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பெ.அய்யண்ணன் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.கோ.முத்துச்சாமி பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.