இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதின் விளைவாக ஏழை, எளிய மக்கள் குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் எந்த வேலைக்கும் போக முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மாநில அரசுகள் அளித்துவரும் பண உதவி மட்டும் போதாது. எனவே, நடுவண் அரசின் சார்பிலும் பண உதவி அளிக்க முன்வருமாறு தலைமையமைச்சரை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.