இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து விட்டது. பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் தங்களின் தவிர்க்க முடியாத தேவைகளின் நிர்பந்தம் காரணமாவே சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் பயணிக்க இ-நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கிறார்கள். இ-விண்ணப்பம் பதிவு செய்யவே பெரும் செலவாகிறது. பிறகு ‘இடைத்தரகர்கள்’ உதவி இல்லாமல் இ-நுழைவு சீட்டு கிடைப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகியுள்ளது.

கொரானா நோய் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கலாம் என அரசு அனுமதித்துள்ளது. இதில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து அரசு இதுவரை சிந்திக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனையாகும். மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளை கருத்தில் கொண்டு இ-பாஸ் அனுமதி முறையை ரத்து செய்து, கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேலும் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கொரானா நோய் தொற்று தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன் களப்பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார். இதன் பிறகு திருச்சி மாவட்டத்தில் கொரானா நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு, வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பலியான கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூபாய் 50/= லட்சம் முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரானா நோய் தொற்று பாதிப்பால் உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25/= லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் முதலில் அறிவித்த இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதம் வெட்டிக் குறைக்கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல .நம்ப வைத்து ஏமாற்றிய செயலாகும். இழப்பீடு தொடர்பான அரசாணை தொடர்பாக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, ஏப்ரல் 22-ஆம் தேதி அறிவித்தபடி கொரானா நோய் தொற்று தடுப்பு பணியில் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், அரசு வேலை வழங்குவதையும் உறுதி செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.