ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்க்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சோதனையிட்ட போது ரூ.5.22 கோடி, நான்கு பைகளில் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் வந்த மூவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். மேற்கண்ட செய்தி 16.07.2020 வியாழனன்று அனைத்து ஏடுகளிலும் வந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் எனில் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது பொது மக்களுக்கு தெரிய வேண்டும். மேலும் ரூ.5.22 கோடி ஆந்திராவில் இருந்து என்ன காரணத்திற்கு, யாருக்கு வந்தது போன்ற விபரங்கள் முழுமையாக தெரிய வேண்டும். சில நாளேடுகளில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், உண்மைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். முறைகேடு செய்பவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் இதுபோன்ற செய்திகள் கடந்த காலங்களிலும் வந்துள்ளது. பரபரப்பான செய்திகள் வரும், பிறகு அதன் கதிபோக்கு என்ன ஆனது என எவரும் அறிய முடியாதபடி, மூடி மறைக்கப்படும். அவ்வாறு ரூ.5.22 கோடி முறைகேட்டிலும் நடந்து விடக் கூடாது. உரிய முழு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட முறைகேட்டிற்கு உரியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமாய், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.