கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் கடுமையாக சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்து 1898 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கையில் 2 இடத்தில் தமிழகம் உயர்ந்திருக்கிறது. தற்போது கொரோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டங்களில் உயர்ந்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, போதிய ஆக்சிஜன் வசதியில்லாத நிலை போன்றவற்றால் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கட்டமைப்பு வசதிகளை பெருக்குகிற வகையில் நிதியை ஒதுக்காமல் ஆதாய நோக்கத்தோடு நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் சில முடிவுகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அவசியமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலை உறுதிப் படுத்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக் காக தமிழக அரசு தனது இணைய தளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இதற்கு சூழல் தாக்க மதிப்பு கட்டாயமல்ல என்ற ஓட்டையை பயன்படுத்தி ஐ.ஆர்.சி. வழி காட்டுதல்களை புறக்கணித்து டெண்டர் விடப்பட்டுள்ளன. சாலைத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தை கணக்கில் கொள்ளாமல் டெண்டர் விடுவது மிகுந்த பாதிப் புகளை ஏற்படுத்தும். கடந்த 5 வருடங்களில் மட்டும் தனது வழக்கமான சாலைகள் மற்றும் பாலங்கள் பழுது பார்ப்பதற்காக தமிழக அரசு சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இந்த வருடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய விருக்கிறது. வருடந்தோறும் பல்லாயிரம் கோடிகள் சாலை பராமரிப்புக்கு செலவிடப் படும் நிலையில் மேலும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு நிதி செலவிடப்படுவது அவசியமா என்கிற கேள்வி எழப்பப்படுகிறது.

ரூபாய் 12 ஆயிரம் கோடி திட்டம் மதிப்பிலான பணிகளுக்கு எப்படி கணக்கிட்டாலும் மிகக் குறைந்தபட்சமாக சல்லிகள் தேவை மட்டும் 59 கோடி கன அடிகள் இருக்கும். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்த உடைக்கப்பட்ட பாறைகளை பரப்பினால் அதன் உயரம் 54 அடிகளுக்கும் மேலிருக்கும். சுமார் 20 லட்சம் லாரிகள் கொள்ளளவுள்ள இந்த கற்களின் தேவைக்கு எத்தனை மலைகளையும், குன்று களையும் பிளக்கப் போகிறார்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இதைத் தவிர எல்லா சாலைப் பணிகளையும் முடிக்க 45 கோடி கனஅடி இயற்கை மண் தேவைப்படும். அதோடு மணல் பயன்பாடு 6 கோடி கனஅடி என மதிப்பிடப்படுகிறது. தேவைப்படும் மணலுக்கு ஆறுகளோ இல்லை. எம் சாண்ட் என்ற பெயரில் மீண்டும் மலைகள் நாசம் செய்யப்படப்போகின்றன.

மேலும் அதை போன்று இந்தத் திட்டத்திற்கான சிமெண்ட் பயன்பாடு சுமார் 7.5 லட்சம் டன்கள். அதாவது சுமார் 1.5 கோடி மூட்டைகள் என்று மதிப்பிடப்படுகிறது. சாலை பணிகளுக்கு இதைத்தவிர 7 லட்சம் டன் தார் தேவைப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல் எவ்வளவு பாதிக்கும் என்பதை கணக்கிட்டால் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இந்தத் திட்டத்தின் அளவை பார்க்கிற போது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதனால்தான் சுற்றுச்சூழல் வழி காட்டும் நெறிமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்து இந்த டெண்டர்கள் விடப்பட்டிருக்கின்றன.

கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து நாம் இன்னும் மீண்டிடாத நிலையில் தமிழக அரசின் நிதிநிலைமை கடன் சுமையிலும், பற்றாக்குறையிலும் அதலபாதாள நிலையிலிருக்கும் போது ரூபாய் 12 ஆயிரம் கோடியில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா என்று மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. கொரோனாவை ஒழிக்க நிதி ஒதுக்கீடு என்பது தமிழக அரசின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்காமல் நெடுஞ் சாலைத் திட்டங்களை கோடிக்கணக்கான ரூபாயை விரயம் செய்வதில் தமிழக அரசுக்கு ஏதே உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் விடுபட்டு சகஜநிலை திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும். எந்த நிலையிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல. ஆனால், இன்றைய நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்கு தான் தமிழக அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் ஆய்வுக்குட்படாமல் நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் தேவையற்ற ஒன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த டெண்டரை விடுவதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அ.தி.மு.க. அரசு ஈடு பட்டிருக்கிறது என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. எனவே, இன்றைய சூழலில் ரூபாய் 12 ஆயிரம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கான டெண்டரை உடனடியாக ரத்து செய்து அந்த நிதியைக் கொண்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.