சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு நீதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும், கோவையில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொருளாளர் E.உமர் அவர்களும், திருச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமுமுக பொருளாளர் N.ஷபியுல்லா கான் அவர்களும் தலைமை தாங்கினார்கள். ஜுன் 26ஐ ஐ.நா. மன்றம் சித்ரவதைக்கு இலக்கானோருக்கான ஆதரவு தினமாக அறிவித்துள்ளது. அந்த தினத்தில் மனிதநேய மக்கள் கட்சி இந்த போராட்டத்தை சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும், இந்த படுகொலைக்கு காரணமான சாத்தான்குளம் ஆய்வாளர் உள்ளிட்ட ஒத்துமொத்த காவலர்களை பணி நீக்கம் செய்து தண்டிக்க கோரியும், பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர், கடமை தவறி காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சிறையில் அடைக்க உத்தரவிட்ட குற்றவியல் நடுவர் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் நிலையில் இருந்தவர்களை சிறைக்குள் அனுமதி சிறை அலுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல்இயக்குனர் ஹென்றி டிபேன் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.