சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

I. சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய சுற்றுக் காவல் ரோந்து வாகன உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர். சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெரு, எண்.48 என்ற முகவரியில் மாலா வ/38, க/பெ.முருகன் என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். மேற்படி முகவரியிலுள்ள 1800 சதுர அடி பரப்பளவு உள்ள சொத்து சம்மந்தமாக மாலாவின் கணவருடன் பிறந்த 4 அக்கா, 2 அண்ணன் ஆகியோருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 17.11.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் மேற்படி மாலா தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்யும் எண்ணத்தில் பெரவள்ளூர் லோகோ இரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கியபோது அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அப்பொழுது அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த K-5 பெரவள்ளளூர் சுற்றுக் காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.D.கபிலன் மற்றும் தலைமைக் காவலர் திரு.C.சேகர் (த.கா.35164) ஆகியோர் சத்தம் கேட்டு, விரைந்து சென்று தற்கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளை காப்பாற்றி அறிவுரைகள் கூறி K-9 திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

II . இராயப்பேட்டை பகுதியில் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். E-2 இராயபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராயபேட்டை, அப்பாகண்ணு தெரு, எண்.14/17, என்ற முகவரியில் தனியாக வசிக்கும் சுமதி (54), க/பெ.ராமகஜேந்திரன் (லேட்) என்பவர் 17.11.2019 அன்று மாலை சுமார் 06.30 மணியாகியும் கதவை திறக்காமலும், பால் பாக்கெட்டுகள் வெளியில் இருந்ததாலும் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் காவல் கட்டுப் பாட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, இராயப்பேட்டை சுற்றுக் காவல் ரோந்து வாகன பணியிலிருந்த உதவி ஆய்வாளர்கள் திரு.R.ஜெயராமன் மற்றும் திரு.K.கருப்பசாமி ஆகிய இருவரும் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், உள்பக்கம் தாழிட்டிருந்தகதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்த சுமதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இசபெல்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததன்பேரில், சிகிச்சை அளிக்கப் பட்டது. விசாரணையில் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக சுமதி மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தது தெரியவந்தது. சற்று உடல்நலம் தேறிய சுமதி பின்னர் மேல் சிகிச்கைக்காக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.

III. சாலையில் தீப்பற்றி எரிந்த காரை அணைத்த காவலர் சென்னை, சூளையைச் சேர்ந்த ரஞ்சித், வ/42 என்பவர் அவரது மனைவி மற்றும் தங்கையுடன் TN 04 AM 4609 என்ற பதிவெண் கொண்ட Hyndai Grand I 10 காரில் 18.11.2019 அன்று இரவு சுமார் 07.40 மணியளவில் F2 எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் இடது பக்க முகப்பில் தீப்பற்றவே, காரை ஓட்டி வந்த மூல்சிங் என்பவர் காரை நடு ரோட்டில் நிறுத்தி அனைவரையும் இறங்கினர். அப்பொழுது பணிமுடித்து அவ்வழியே வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் C.காரணீஸ்வரன் (கா.51930) என்பவர் கார் தீப்பற்றி எரிவதை கண்டவுடன் விரைந்து செயல்பட்டு, அவ்வழியே கோயம் பேடு நோக்கி சென்றுகொண்டிருந்த வெளியூர் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்து வந்து கார் மீது செலுத்தி காரில் இருந்த தீயை அணைத்தார். இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமலும், கார் முழுவதும் எரிந்து சேதமடையாமலும் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IV. எழும்பூர் பகுதியில் அடை யாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவில் தவற விட்ட உடைமைகளை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் கொடுங் கையூர், முத்தமிழ் நகர், 4வது பிளாக், எண். 204, என்ற முகவரியில் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி வ/56, த/பெ. துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். முரளி யின் ஆட்டோவில் கடந்த 16.11.2019 அன்று 11.30 மணியளவில் F-2 எழும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத ஒரு நபர் சவாரிக்காக சேத்துப்பட்டு செல்லவேண்டி என்பவர் ஆட்டோவில் குடிபோதையில் ஏறியுள்ளார். ஆட்டோ பாந்தியன் சாலை வழியாக செல்லும்போது பாந்தியன் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தன்னுடைய மனைவி நின்று இருப்பதாக கூறி ஆட்டோ வை நிறுத்தி இறங்கி ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார். அவர் மீண்டும் ஆட்டோவில் ஏற தாமதமானதால் ஆட்டோ ஓட்டுனர் முரளி புறப்பட்டு சென்று விட்டார். பின்பு சேத்துப்பட்டு அருகே வந்து பார்த்தபோது பின்னால் ஒரு Bag இருந்ததை பார்த்து அதை பிரித்து பார்த்துள்ளார். அதில் சுமார் 15 சவரன் தங்க நகைகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே ஆட்டோ ஓட்டுநர் முரளி நேர்மையாக மேற்படி தங்க நகைகள் அடங்கிய பையை F-2 எழும்பூர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்துள்ளார். எழும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறப்பாக பணிபுரிந்த K-5 பெரவள்ளுர் சுற்றுக் காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு. D.கபிலன், தலைமைக் காவலர் திரு.C.சேகர் (த.கா.35164), E-2 இராயப்பேட்டை சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.R.ஜெயராமன், திரு.K.கருப்பசாமி மற்றும் ஆயுதப்படை காவலர் திரு.C.காரணீஸ்வரன் (கா.51930) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (19.11.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகமதி வழங்கினார்.