சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச.ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில்,சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும்ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேற்படி பிரிவு 144 கு.வி.மு.ச.ஐ நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் இன்று 29.06.2020 அன்று சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 8,350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 6,151 இருசக்கர வாகனங்கள், 145 ஆட்டோக்கள் மற்றும் 482 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 6,778 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது 3,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கையொட்டி 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரையில் 69,012 வழக்குகளும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது 26,886 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.