சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சுமார் 1,200 மாணவிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்தனர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக பெண்கள் மற்றும் மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், காவலன் SOS செயலி பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது எனவும், பெண்கள்இச்செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கலாம் எனவும், ஆபத்து நேரங்களில் இச்செயலி மூலம் காவல்துறையை அழைத்து மிக விரையில் காவல்துறையின் உதவியை பெறலாம் என தெரிவித் தார்.

முன்னதாக காவலன் SOS செயலியின் தன்மை, பயன்கள், செயல்படும் விதம், இதை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையாளர் அவர்கள் இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மாணவியர்களுக்கு வழங்கி, தங்களது குடும்பத்தினர்க்கும் இச்செயலியின் பயன் குறித்து எடுத்துரைக்கும்படி அறிவுறுத்தினார். இதன் பயனாக சுமார் 1,200 மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு.ஐசரி கே. கணேஷ், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., புனித தோமையர்மலை காவல் துறை ஆணையாளர் திரு.கே.பிரபாகர், காவல் அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர்.