தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந் துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி யுள்ளார்கள். அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன் ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடக மற்றும் தொழில் நுட்பத்துறை திருவள்ளுர் மாவட்டத் தலைவர் முகமது தாரிக் மறுபதிவு செய்திருக் கிறார். இந்த சம்பவத்தை மீஞ்சூர் காவல்துறை தவறான பொய்ச் செய்தியை பரப்பியதற்காக முகமது தாரிக், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தி யை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, உடனடியாக வழக்கு பதிவு செய்ததை காவல்துறையினர் திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய ஜனநாயக விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தொடருவார்களே யானால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.