பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டிய மைதிலி, பெ/வ.24, க/பெ.ரமேஷ்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னை, மயிலாப்பூரிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 01.9.2019 அன்று காலை வந்துள்ளார். பின்னர் பாண்டிய மைதிலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் (01.9.2019) காலை சுமார் 11.30 மணிக்கு
அண்ணாசதுக்கம் சென்று சுற்றி பார்த்துவிட்டு மதியம் சுமார் 02.00 மணிக்கு அண்ணா சதுக்கத்திலிருந்து, ஆட்டோவில் ஏறிச் சென்று கலங்கரை விளக்கம் அருகில் இறங்கி சென்றனர் அதன்பிறகு, பாண்டிய மைதிலி தான் கொண்டு வந்திருந்த 21 சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலி, நெக்லஸ், பிரேஸ்லேட் ஆகிய தங்க நகைகள், பணம் ரூ.25,000/-, செல்போன் மற்றும் அடையாள ஆவணங்கள் ஆகியவை அடங்கிய கைப்பையை மேற்படி ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டது தெரியவந்தது.

அதன்பேரில், பாண்டிய மைதிலி D-5 மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மெரினா காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.T.பாலமுருகன். அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, புகார்தாரர் சென்ற ஆட்டோவின் அடையாளங்களை வைத்தும், புகார்தாரர் பாண்டிய மைதிலியின் செல்போன் எண்ணின் டவர் லொகேஷனை வைத்தும் துரித விசாரணை மேற்கொண்டு அன்றைய தினம் 01.9.2019 இரவு பாண்டிய மைதிலி சென்ற ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரன், புளியந்தோப்பு என்பவரை கண்டுபிடித்து, ஆட்டோவின் பின்பக்கம் இருந்த கைப்பையை கண்டுபிடித்தார்.