முன்ஜாமீன் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்

தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர  உள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம்  ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை  இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது  என்றும் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக  முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள  காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா என்று பேசி, காணொலி  ஒன்றை வெளியிட்டார். மூன்று வர்ணங்களுக்கு புது விளக்கத்தையும் எஸ்.வி.சேகர் அளித்தார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக  வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை  நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் இணைய வழியில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு 2-ன் கீழ்
எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர்  தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி  (திங்கட்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.