வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம், வ/48, த/பெ.மணி மற்றும் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கோபி, வ/33, த/பெ.துரைராஜ் ஆகியோர் தங்களது ஆட்டோவில் 15.7.2020 அன்று மாலை வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையிலுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நிறுத்தியபோது, சாலையில் பணக்கட்டு இருந்ததை கண்டனர். இருவரும் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, யாரும் அப்பணத்திற்கு உரிமை கோரவில்லை. ஆகவே, ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம் மற்றும் கோபி ஆகியோர் மேற்படி பணத்தை H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சாலையில் பணம் கிடந்த விஷயம் குறித்து கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். மேற்படி சம்பவம் குறித்து அறிந்த சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டல இணை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன்,இ.கா.ப., சாலையில் கிடந்த பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஏகாம்பரம் மற்றும் கோபி ஆகியோரை 16.7.2020 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.