விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” – தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது: “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன்தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் சரி என்று சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கதாபாத்திரத்தின் தன்மைகளை விளக்கமாக கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் குழுவும் எனக்கு நல்ல பாதையை கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் நல்முயற்சி எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. கென்னுக்கு தன்நம்பிக்கை அதிகம். டி.ஜே பாடியே நம்மை சரி பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி, அவரோடு வேலை பண்றது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். வடசென்னை தான் வெற்றிமாறனின் நல்லபடம் என்று நினைத்தேன். ஆனால் அசுரன்தான் அவரின் நல்லபடமாக இருக்கும். மக்கள்தான் வடசென்னைக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். அதுதான் பெரியது. விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது” என்றார்.


இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: “ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கான வெளியீடு தேதி இந்தப்படம் தான் சீக்கிரம் வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் தாணு சார். இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டது. வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை துவங்க முடிவு செய்தோம். நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விசயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப் படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது. பசுபதி கூட வேலை பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன் தற்போதுதான் முடிந்தது. முதலில் இப்படத்தில் நான் முடிவு செய்த நடிகர் கருணாஸ் மகன் கென் தான். ஒரு காவல்த்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்திற்கு பாலாஜி சக்திவேல் சார் நடிக்க முதலில் மறுத்தார். பின் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். நரேன் ஒரு ஆனித்தரமான கதாபாத்திரம் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து மீண்டு எப்படி வரக்கூடிய ஒரு காதாபாத்திரம் மஞ்சுவாரியாருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். தனுஷ் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு படபிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சிக்கா ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை எளிதாக செய்தார். இந்தப்படம் எல்லோரிடமும் இருந்து எடுத்துக் கொண்ட ஒப்பந்தம் அதிகம். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். என்னிடம் கதையே கேட்கவில்லை. சொன்ன நேரத்தில் சரியாக வருவார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களும் ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் அதிகபட்ச நடிப்பை கொடுத்தது எங்களின் வரம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார். என் முயற்சிகளை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வேலை பண்ணும் போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப்படத்திற்காக நாங்க நிறைய முன்னேற்பாடு செய்திருந்தோம். படத்தில் ஆர்.ஆர் ரொம்ப புதுசா இருக்கும். கலை இயக்குநர் நான் போதும் என்று சொன்னாலும் அதைவிட அதிகமாக செய்து தருவார். என் கூட படத்தொகுப்பு வேலை செய்வது ரொம்ப சிரமம். என் படதொகுப்பாளர் அதைப்புரிந்து வேலை செய்தார். அதைப்போல தான் சண்டைக்காட்சி இயக்குநரும். எனக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய கேடயம் தனுஷ்”. என்று கூறினார்.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது: “தனுஷ் சொன்னதும் இந்தப்படத்தை உடனே துவங்கினேன். வியக்கத் தகுந்த இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் அலைபேசியில் தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார் என்று சொல்வார். மறுநாள் தனுஷ் தொலைபேசியில், “சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது என்பார். ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் வேண்டும். வெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி” என்றார்.

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது: “இந்த வாய்ப்பைத் தந்த தாணு சார், வெற்றிமாறன் சார் , தனுஷ் சார் அனைவருக்கும் நன்றி. ஒரு மண் சார்ந்த படத்தில் வேலை செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் “என்றார்.

மஞ்சுவாரியர் பேசியதாவது: “இந்தப்படம் எனக்கு ரொம்ப முக்கியம். முதலில் படம் இப்படி ஒரு அதிக திறன் வாய்ந்த குழுவோடு களம் இறங்குறது சந்தோஷமாக இருக்கிறது. வெற்றிமாறன் படம் என்றால் ரசிகர்கள் காத்திருப்பார்கள். தனுஷின் ரசிகை நான். இவர்கள் அனைவரோடும் வேலை செய்தது நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறது. இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.