வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்கள் V-4 ராஜமங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலஷ்மி ஜுவல்லரி மற்றும் அடகுக்கடையில் மேள்தளத்தை துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் 3 ½ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற திருடர்களை பிடிப்பதற்காக காவல் குழுவினருடன் இராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தார். அப்பொழுது 13.12.2017 அன்று அதிகாலை இராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், ஜெய்தரன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்தபோது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கி சூட்டில் வீரமரணமடைந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்களின் 2வது நினைவு தினத்தை முன்னிட்டு, 13.1.2.2019 அன்று காலை, காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில், காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மறைந்த காவல் ஆய்வாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மறைந்த காவல் ஆய்வாளர் திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் காவல் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மறைந்த காவல் ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., (தலைமையிடம்), திரு.சி.ஈஸ்வர மூர்த்தி,இ.கா.ப.,(மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப, (நுண்ணறிவுப்பிரிவு), மருத்துவர் எம்.சுதாகர் (நுண்ணறிவுப்பிரிவு), காவல் அதி காரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.