இடதுசாரி சிந்தனையாளர் இரா. ஜவஹர் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இடதுசாரி சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் இரா. ஜவஹர் (வயது 73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

தோழர் இரா. ஜவஹர் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், கொள்கை மீதும் தீராத பற்றுக் கொண்டவர். தமிழகத்தில் கம்யூனிச கருத்துக்களை எளிமையாக எடுத்து செல்வதற்கும், பரப்புவதற்கும் முயன்றவர். அந்த வகையில் அவர் எழுதிய “கம்யூனிஸம் – நேற்று இன்று நாளை” என்ற நூல் இன்றும் பல இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.  சர்வதேச பெண்கள் தினத்தின் வர்க்க உள்ளடக்கத்தை மையமாக வைத்து எழுதிய “சர்வதேச மகளிர் தினத்தின் உண்மை வரலாறு என்ற ஆய்வு நூல் மிகுந்த சிரத்தையோடு எழுதப்பட்ட ஒன்றாகும். ‘ஒரு மார்க்சியப் பார்வை’ உள்ளிட்டு இடதுசாரி சித்தாந்த கருத்துக்கள் அடங்கிய பல நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழக எழுத்துலகில் இரா.ஜவஹர் நல்ல அங்கீகாரம் பெற்றவர். எளிமையாகவும், கருத்தில் பிடிப்பும், உழைக்கும் மக்களுக்கு அரசியல் கல்வி புகட்டுவதில் தணியாத ஆர்வம் என தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டவர். தீவிரமான மார்க்சிய வாசிப்பாளர், எழுத்தாளர். அவசர காலங்களில் வடசென்னை அம்பத்தூர் பகுதியில் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டவர். தினமணி, நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதுடன் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியவர்.

அவரது மனைவி திருமதி பூர்ணம் சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது இணையரை பிரிந்ததில் மீளாத்துயரில் தோழர் ஜவஹர் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தனது இறுதி மூச்சுவரை இடதுசாரிக் கொள்கைகள், கம்யூனிஸக் கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்தவர். அவரது மறைவு  இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன்கள் ஜே.பி. டார்வின், ஜே.பி. பாலு மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்