ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்பு போராட்டத்திற்கு ஆதரவு – கே.பாலகிருஷ்ணன்

கோவை மாவட்டம், இருகூர் முதல் பெங்களூர் வரை விவசாய விளை நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனம் பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்தும், சாலையோரமாக இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க முற்பட்ட போது விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விளை நிலங்களுக்குள் எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. தற்போது ஊரடங்கை பயன்படுத்தி காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன் விவசாயிகளின் சம்மதம் இல்லாமல் பெட்ரோலிய குழாய் பதிப்பதற்கான ஆயத்த பணிகளை ஐ.டி.பி.எல். நிறுவனம் மேற்கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு, விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2020 செப்டம்பர் 15ந் தேதி முதல் விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள தொடர் காத்திருக்கும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வாறு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.