கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சி கட்டுப்படுத்த வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்

கத்தரி செடியில் தண்டு துளைப்பான் பூச்சியை வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான சு. செந்தூர்குமரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கோடை கத்தரி பயிரிட்டு வருகின்றனர். அவ்வாறு பயிரிடப்படும் கத்தரியில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்கி பாதிப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் பலரும் தெரிவித்துள்ளனர். பொதுவாக கத்தரி செடி நடவு செய்த 15 முதல் 20வது நாளில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் ஆரம்பிக்கும். இந்த தண்டு துளைப்பானை விவசாயிகள் சரியாகக் கண்டறியாவிட்டால் எதிர்காலத்தில் மகசூல் பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமின்றி, கத்தரிக்காய் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும்.

எனவே தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வேப்ப எண்ணெய் என்ற அளவில் கலந்து பயிரிடப்பட்டுள்ள பரப்பளவுக் கேற்ப 20லிருந்து 25 நாளைக்கு ஒரு முறை மட்டுமே தெளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தெளித்தல் கூடாது. ஏனெனில் கத்தரி செடி மலட்டு தன்மைக்குச் சென்று விடும்.

இந்த 20-25 நாள்கள் இடைவெளியில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் பூச்சி தென்பட்டால் வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் இல்லாமல் இஞ்சி மற்றும் பூண்டு கரைசல் அல்லது மூலிகை பூச்சி விரட்டி கரைசல் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி என்ற அளவில் எடுத்து தெளித்தும் கட்டுப் படுத்தலாம்.

மேலும் கத்தரி செடி கோடை காலத்தில் பூப்பிடிக்கிற நிலையை அடைய மீன் அமிலம் கரைசல் மற்றும் பஞ்சகாவியா இரண்டையும் சம அளவு கலந்து அந்த கரைசலில் 20 மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் வாரம் ஒரு முறை தெளித்து பூ கொட்டாத நிலையை பெற்று நிறைவான மகசூலை பெறலாம். இதற்கு பதிலாக பிளானோபிக்ஸ் என்கிற வேதியியல் மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் எடுத்து தெளித்தும் பூ கொட்டாத நிலையை உருவாக்கலாம்.

கத்தரியில் கருவுறுதல் காலமானது ஒவ்வொரு நாளும் காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் நடைபெறும். அதற்கு முன்பாக 8 மணி முதல் 9 மணி வரை குளிர்ந்த தண்ணீரை செடிகளில் பனித் துளிபோல் தெளிப்பதன் மூலம் செடியை சுற்றி இருக்கக் கூடிய வெப்ப நிலையை குறைத்து கருவுறுதல் சிறப்பாக நடைபெறும். இதன் மூலம் அதிக மகசூலை பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.