சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு

பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, தாம்பரம், இரும்புலியூர், விவேகானந்தா தெரு, எண்.40/5 என்ற முகவரியில் வசிக்கும் சுமதி, வ/51, க/பெ.வெங்கடேசன், என்பவர் அவரது கணவர் மற்றும் அக்கா விஜயலட்சுமியுடன் நேற்று (03.02.2021) மதியம் பட்டாபிராம், விவசாய தெருவில் உள்ள அவர்களது காலி இடத்தை பார்த்துவிட்டு ஆவடிக்கு ஆட்டோவில் சென்றனர். இவர்கள் ஆவடி சென்று இறங்கியபோது, சுமதி ஆட்டோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, ரூ.10,000/- மற்றும் நிலம் தொடர்பான அசல் ஆவணங்கள் அடங்கிய பையை காணாமல் தவித்து, இது தொடர்பாக புகார் தெரிவிக்க T-6 ஆவடி காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்ததனர்.

இந்நிலையில், T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ். செல்வகுமார் (த.கா.26239) 03.02.2021 அன்று மதியம் சுமார் 02.00 மணியளவில், பட்டாபிராம், இந்து கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் தங்க நகை, பணம் மற்றும் பத்திரங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், தலைமைக் காவலர் செல்வகுமார் அந்த பையில் உள்ள ஆவணத்தில் இருந்த சுமதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, சற்று முன் அவ்வழியே ஆட்டோவில் செல்லும்போது, தவறவிட்டதாக சுமதி தெரிவித்தார். பின்னர் செல்வகுமார், மேற்படி பையுடன் ஆவடி சென்று சுமதியை சந்தித்து, ஆவணங்கள் சரி பார்த்தபின் மேற்படி 2 சவரன் தங்க நகை, ரூ.10,000/- மற்றும் நிலம் தொடர்பான அசல் ஆவணங்கள் இருந்த பையை சுமதியிடம் ஒப்படைத்தார். தங்கநகை, பணம் மற்றும் பத்திரங்கள் இருந்த பையை நேர்மையான முறையில் உரியவரிடம் ஒப்படைத்த T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.செல்வகுமார் (த.கா.26239) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 04.02.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.