தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்கப்அரசு அனுமதி அளிக்கக் கூடாது – வேல்முருகன்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆய்வுகளையும் அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது என்றும் 3ஆம் கட்ட ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என தெரிவித்துள்ளார். ஆனால்,  அதையெல்லாம் மதிக்காத ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க வேண்டும் என்றும் இதற்கான உத்தரவை  தமிழ்நாடு முதலமைச்சர்  பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.