தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையினை மே மாதம் இறுதியில் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் கல்விக் கொள்கையில் மூன்று ஐந்து எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் உருவாக்குகிற போது பள்ளிக்கு வரும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை கொண்டு வந்தனர். இச்சட்டத்தால் மாணவர்களின் இடை நிற்றல் குறைந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு வரையான கல்வியறிவை பெற்றிருக்கின்றனர். கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு கல்விக் கொள்கையை உருவாக்குகிறபோது நம் நாட்டின் சமூகச் சூழலை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமலும், பிஜேபி ஆர்எஸ்எஸ் கொள்கையின் விருப்பப்படியும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கக்கூடிய வகையில் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை பரிந்துரைத்துள்ளது.

குலக்கல்வி, இந்தி திணிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு உயர்கல்வி தாரை வார்ப்பு, தேசிய கல்வி ஆணையம் என்ற பெயரில் மாநில அரசின் அதிகாரங்களை பறித்து, மத்திய அரசின் ஒற்றை அதிகாரத்திற்குள் எடுத்துக்கக் கூடிய தேசிய கல்வி கொள்கையை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கூடுதலாக மத்திய அரசின் கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு 13/09/2019 அன்று 5, 8 ஆம் வகுப்பு களுக்கு நடப்பு கல்வியாண்டிலிருந்தே பொதுத் தேர்வு நடத்தப் படும் என்ற அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தமிழக மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசின் அதிகாரத்திற்கு பணிந்து தமிழக அரசு செயல்படுவது தமிழக மக்களை மேலும் கோபமடையச் செய்கிறது.

இந்திதான் இந்தியாவை இணைக்கும். எனவே அனைவரும் இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது மத்திய அரசின் ஒரு மொழிக் கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்துகிறது. ஒரே மொழி, ஒரே நாடு என்கிற மத்திய அரசின் கொள்கையால் நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு பெரும் ஆபத்து நெருங்குகிறது. நாட்டின் ஒற்றுமைக்காக அனைத்து மொழிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கொள்கையுடையவர்கள் ஒரணியில் திரண்டு போராட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் இல்லையேல் கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தையும் சந்திக்க நேரிடுமென்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.

மௌ.குணசேகர்                          சீ.தினேஷ்

மாநிலத் தலைவர்               மாநிலச் செயலாளர்