தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக் காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று (08-11-2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இந்தக் கொடூரப் படுகொலையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

செய்தி வெளியிட்டதற்காகப் படுகொலை என்றால், தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலையின் அவலத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சமுக விரோதக் கும்பல்கள், மணல் , நீர்நிலை ஆக்கிரமிப்பு, கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பவர்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன. இதன் விளைவாகவே இன்று ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சமுக விரோதக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அரசியல் கையூட்டுக்குக் கட்டுப்பட்டுள்ளதா? இதில் எதுவாக இருந்தாலும் உள்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுக் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. சமுக விரோதக் கும்பலின் கொலை வெறிக்குப் பலியான நிருபர் மோசஸ் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு சென்னை பத்திரையாளர் மன்றத்தின்  இணைச் செயலாளர் பாரதிதமிழன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.