வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம்

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி,

பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி…

வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் இழப்புகளுக்கு ஆளாவதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். இது ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் போது, ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் தர்க்க நியாயம் அற்ற நடைமுறையால் எழுவதாகும்.

எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் வட்டி விகிதங்கள் உயர்வுக்கு ஆளாகும் போது தன்னியக்கமாகவே வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றி, பிடித்தத்தையும் செய்து விடுகிறார்கள். ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் அப்பயனை தங்களுக்கு அளிக்குமாறு விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இதை அவர்கள் செய்யாவிடில் மிகப் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள்.
அவர்கள் இழக்கும் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ள நாட்டில் இந்த நடைமுறை சாமானிய மக்களிடம் இருந்து பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு ஓப்பானதாகும். மேலும் இந்த நிறுவனங்கள், வட்டிக் குறைப்பிற்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அப் பயனை வழங்குவதற்கான அலுவலக நடைமுறைக்கு சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக விதிக்கிறார்கள். அதன் மீது 18% ஜி.எஸ்.டி வரியும் கட்ட வேண்டியுள்ளது. விழிப்புணர்வோடு வட்டிக் குறைப்பு பயனை பெறுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களையும் தண்டிப்பதேயன்றி இது வேறென்ன!

வட்டி விகித மாற்றங்களுக்கு இரட்டை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது இயற்கை நீதிக்கு முரணானது. அதுவும் “நெகிழ்வான வட்டி விகித” முறைமைக்கு கடன் வாங்குகிற முதற் கட்டத்திலேயே விருப்பம் தெரிவிக்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு நிபந்தனையை விதிப்பது வாடிக்கையாளர் நலனுக்கு முற்றிலும் எதிரானது. எனவே வாடிக்கையாளர்கள் நலன் காக்கிற வகையில், எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் இத்தகைய தர்க்க நெறிகளுக்கு மாறான நடைமுறையைத் தொடராமல் தடுக்குமாறும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டித் தொகைகளை பின் தேதியிட்டு திரும்ப வழங்குவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.