“கேங்கர்ஸ்” திரைப்பட விமர்சனம்

குஷ்பு சுந்தர் சி, ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ், காளை, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி, விமல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கேங்கர்ஸ்”. ஒரு பாடசாலையில் சில மாணவர்களிடையே போதை பொருள் விற்பனை நடக்கிறது. அத்துடன் சில மாணவிகள் காணாமல் போய்விடுகிறார்கள். இது குறித்து அப்பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றும் கேத்ரின் தெரசா காவல்த்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கிறார். ஒரு காவல்த்துறை ரகசிய ஆய்வாளரை ஆசிரியர் போல பாடசாலைக்கு அனுப்பி வைப்பதாக கேத்ரின் தெராவிடம் கூறி அனுப்புகிறார் காவல்த்துறை ஆணையாளர். சில நாட்கள் கழித்து விளையாட்டு ஆசிரியராக அப்பாடசாலைக்கு சுந்தர் சி வருகிறார். சுந்தர் சி தான் அந்த ரகசிய ஆய்வாளர் என்று கேத்ரின் தெரசா நினைத்துக் கொள்கிறார். ஆனால் சுந்தர் சி ரகசிய ஆய்வாளர் இல்லை என்று தெரிய வருகிறது. அப்படியானால் சுந்தர் சி யார்? எதற்காக அப்பாடசாலைக்கு ஆசிரியர் என்று பொய் சொல்லி வருகிறார்?. என்பதுதான் கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை காட்சிகளாகவே படத்தை விறுவிறுப்பாக ஓட்டி இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. பழைய வடிவேலுவை இப்படத்தில் காணமுடிகிறது. பலப்பல வேடங்களில் சுந்தர் சியுடன் இணைந்து நகைச்சுவையின் அதிர்வலைகளை திரையங்கில் தெறிக்கவிடுகிறார் வடிவேலு. ஒரு காட்சிகூட வீணடிக்கப்படவில்லை. சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து தெறிக்கவிடும் நகைச்சுவையை, சிரிக்க மறுப்பவன்கூட தன்னை மறந்து வாய்விட்டு சிரித்துவிடுவான். இவர்களுடன் சேர்ந்து நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளார்கள். குறிப்பாக சந்தானபாரதி, வாணிபோஜன் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. இடைவேளைக்கு முன் பகுதி கலகலப்பாகவும் பின் பகுதி முற்றிலும் கதை திருப்புமுனையாகவும் அமைத்திருக்கும் சுந்தர் சி பாராட்டுதலுக்குறியவர். இரண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் படத்தை இயக்கியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சியில் சுந்தர் சி யார் என்பதையும் இரண்டாம்பாகம் வரும் என்பதையும் அருமையாக விளக்கியிருக்கிறார்.