தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் தினமாக கொண்டாடப்படும்‘‘ என அறிவித்திருந்ததின்பேரில், காவலர் தினத்தினை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் காவலர் தினம் கொண்டாடப்பட்டது.காவல்துறையினரின் நலனில் அக்கறை செலுத்துவதும் அவர்தம் குடும்பத்தினரின் நலனை உயர்த்துவதற்கான வழிகாட்டுதலும் வீரதீர செயல்களின் சிறப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் தன்னம்பிக்கையுடன் தன்னலம் கருதாத காவல் கடமையை உறுதிப்படுத்துவதற்கு உறுதிமொழி எடுத்தும், சென்னை பெருநகர காவல்துறையினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் காவலர் தினத்தை கொண்டாடினர்.வேப்பேரி காவல் ஆணையரக, 2வது தளத்திலுள்ள கலந்தாய்வு கூடத்தில், காவல்துறையினரின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டும் பயிற்சி முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா, தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு துணை தலைவர் முனைவர் ஆர்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சி, ‘நான் முதல்வன்‘ திட்டத்தின்படி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பெஞ்சமின், பவித்ரா உள்ளிட்ட குழுவினர், உரிய பயிற்சி திட்ட விவரங்களை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கினர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி பயிலும் குழந்தைகள் தமது பெற்றோருடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்றுநர்களுக்கு காவல்துறை சார்பாக காவல் ஆணையாளர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இதே போல்,காவலர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரவேஷ்குமார் சென்னை, வேளச்சேரி, குருநானக் கல்லுரி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியை துவக்கி வைத்து, போட்டியாளர்களுக்கு காவல்துறையின் வீரதீர செயல்கள் பற்றி எடுத்துரைத்து, வாழ்த்துக்கள் கூறி ஊக்குவித்தார்.மேலும், காவலர் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படை புதுப்பேட்டை மற்றும் புனித தோமையர்மலை வளாகங்களில் துணை ஆணையாளர் (மோட்டார் வாகனப்பிரிவு) திரு.ஜெயகரன் தலைமையில், 2,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு, காவலர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி உறுதிமொழி எடுத்தனர். அதே போல், காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு சார்பாக காவல் துணை ஆணையாளர்S.செல்வராஜ்,தலைமையில் காவல் துறை அதிகாரிகள், ஆளினர்களால் ஒருங்கிணைந்து காவலர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், காவலர் தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக இது போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
