ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கத்தில் அனுமோள், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருகும் படம். “காயல்”. லிங்கேஷ் கடல் ஆராய்ச்சி நிபுணர். தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவர். அவரை உயர்சாதி பெண்ணான காயத்ரி காதலிக்கிறார். காயத்ரியின் தந்தை ஐசக் இவர்களது காதலை ஆதரிக்கிறார். ஆனால் காயத்ரியின் அம்மா அனுமோள் இவர்களின் காதலை எதிர்க்கிறாள். அத்துடன் தனது உயர்குல சாதிப்பையன் ஒருவனுக்கு காயத்ரியை மணமுடிக்க ஏற்பாடும் செய்கிறார். இதை தவிர்க்க காயத்ரி என்ன முடிவு எடுத்தார்? காதலன் லிங்கேஷ், தந்தை ஐசக் ஆகியோரின் நிலை என்ன? என்பதை ஒரு நாவல் கதையை படிப்பதுபோல் படத்தை இயக்கியுள்ளார் தமயந்தி. கைத்தட்ட வைக்கிறது தமயந்தியின் எண்ணமும் இயக்கமும். ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லத்தனத்தை அமைதியான தன் முகத்தில் படரவிட்டு குவிந்த தாமரைபோல் முகத்தை தொங்கவிட்டு நடித்த அனுமோளை பாராட்ட வேண்டும். காதலிக்காக ஏங்கும் காட்சியிலும் ஸ்வாகதாவின் வழியவரும் காதலை புறக்கணிக்கும் காட்சியிலும் லிங்கேஷின் நடிப்பு தனித்துவம் பெறுகிறது. ஒரு தந்தையின் பாசத்தை, மனவலியை பிரதிபலிக்கும் ஐசக்கின் நடிப்பு அலாதியானது. காயத்ரி நடிப்பில் தனிக்கவனம் செலுத்தி நடித்துள்ளார். காதலிக்கும் காட்சியிலும் தந்தை காட்டும் பாசத்திலும் சிரித்த முகத்துடன் நடித்து பார்வையாளர்களின் மனதில் பதிந்துவிடுகிறார். இதுவரை பார்க்காத தன் குழந்தையின் குரலை மட்டும் கேட்டு அழுகின்ற காட்சியில் ரமேஷ் திலக்கின் நடிப்பால் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார். (சபாஷ் ரமேஷ்). ஒளிப்பதிவும் இசையும் படத்ஹுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஒரு நாவலை படித்து முடித்த திருதியுடன் திரையரங்கைவிட்டு வெளியே வரலாம். “காயல்” எதார்த்த வாழ்வியலை மனவலியுடன் பேசும் படம்.*****