புட் ஸ்டெப்ஸ் புரடெக்ஷன் தயாரிப்பில் எஸ்.சிவராமன் இயக்கத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலகியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கிம் படம் “வில்” (உயில்). சென்னையில் மனைவியை இழந்து தனியாக தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் செல்வந்தர் ஒருவர், கிராமத்திலிருக்கும் சொத்துக்களை தனது இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக உயில் எழுதி வைத்துவிட்டு, சென்னையிலுள்ள அடுக்குமாடி வீட்டை அலகியா என்ற இளம் பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து இறந்து விடுகிறார். அந்த இளம் பெண்ணுக்கு எழுதி வைத்த வீட்டையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு ஒரு பெண்ணை அலகியாவாக நீதிபதி சோனியா அகர்வால் முன்நிறுத்தி நடிக்க வைக்கிறார்கள் அவரது மகன்கள். இதில் சந்தேகமடைந்த நீதிபதி சோனியா அகர்வால், நீதிமன்ற காவல் உதவி ஆய்வாளர் விக்ராந்தை அழைத்து உண்மையான அலகியாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி உத்திரவிடுகிறார். உண்மையான அலகியாவை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? அவள் யார்? அவள் பெயருக்கு வீட்டை எழுதி வைத்த காரணம் என்ன? என்பதுதான் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை திரைப்படமாக இயக்கியிருக்கிறார் எஸ்.சிவராமன். இச்சம்பவம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால் படம் முழுவதையும் ரசிக்க முடிகிறது. மனித ஆசைகளையும் நியாயத்தையும் படம் சித்தகரிக்கிறது. நீதிபதியாக வரும் சோனியா அகர்வால் படத்தில் நீதிபதியாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒரு நீதிபதிக்கு வேண்டிய இலக்கணத்தை தன் முகத்தில் படரவிட்டு நடித்திருக்கிறார். விக்ராந்த் விசாரணை நடத்தும் காட்சிகளில், நிஜ காவலரை நம் கண்முன் காட்டுகிறார். அந்தளவுக்கு தத்ரூபமாக நடித்து படத்துக்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார். அலகியாவுக்கு இது முதல் படம்போல் தெரியவில்லை. பலபடங்களில் நடித்த அனுபவசாலியாக திரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். நீதிமன்ற காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியுள்ளது. முதல் பாதி சற்று சலிப்பு தட்டினாலும் இரண்டாம்பாதி விறுவிறுப்பு அடையச் செய்கிறது. சோனியா அகர்வாலின் தம்பி செளரப் அகர்வால் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்தின் ஓட்டத்த்கிற்கு துணைநிற்கிறது. அவரின் எதிர்காலம் பிரகாசிக்கலாம். மனித வாழ்வியலின் எதார்த்தத்தை திரையில் காட்டியுள்ள இயக்குநர் எஸ்.சிவராமனை கைகுலுக்கி வரவேற்கலாம்.
“வில்” திரைப்பட விமர்சனம்
