செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா,செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புனித தோமையர்மலை வட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மற்றும் மகப்பேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார்க. அப்பொழுது நோயாளிகள், தாய்மார்கள் ஆகியோரிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருள்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி பம்மல் பகுதியில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் 71  குடும்பங்களுக்கு  இலவச வீட்டுமனை பட்டா அளிப்பது சம்மந்தமான கள ஆய்வு மேற்கொண்டார். சம்மந்தப்பட்ட நபர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் செயின்ட் ஜோசப் அருள் இல்லத்தில் பெண்கள் தங்கி பயிலும் காப்பகத்தினை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு தங்கி படிக்கும் மாணவிகளிடம் கலந்துரையாடி தாங்கல் என்ன படிக்க விரும்புகிறீர்களோ, தங்களுக்கு வேறு ஏதேனும் வசதிகள் தேவைப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும், காப்பக பொறுப்பாளர்களிடம் மாணவிகளுக்கு அளிக்கப்படும் உணவு, மற்றும் தங்கும் வசதி ஆகியவை தரமானதாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் சுகம் நகரிலுள்ள ஸ்ரீபூர்ணமஹா மேரு டிரஸ்ட்-ல் உள்ள முதியோர் காப்பகத்தினை ஆய்வு செய்து அங்கு தங்கியுள்ள முதியவர்களிடம் நலம் விசாரித்தார்.

அதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் புனித தோமையர் மலை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். மேடவாக்கம் ஊராட்சி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 15 வகுப்பறை கட்டிடத்தினையும், ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தினையும் ஆய்வு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் உறுதி தன்மை மற்றும்  கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் ஆகியவற்றை கேட்டறிந்தார்கள். மேலும், கட்டிட பணிகளை துரிதப்படுத்தி குறிப்பிட்ட கால அளவிற்குள் ஒப்படைக்குமாறு ஒப்பந்ததாரர் மற்றும்  துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மேடவாக்கத்தில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையினை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, புனித தோமையார் மலை ஒன்றியம், மதுரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்ல பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். கட்டப்படும் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரத்தினையும், கட்டிடத்தின் அளவு சரியான முறையில் இருக்கின்றதா என்பதை அளவீடு செய்தார்கள். மதுரப்பாக்கம் ஊராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட மக்கும் குப்பை அள்ளும் வாகனத்தினை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முரளி, செயற்பொறியாளர் தணிகாசலம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவண குமார், பல்லாவரம் வட்டாட்சியர் செந்தில், புனித தோமையர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன், நிர்மல் குமார், புனித தோமையர் மலை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.