48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்த திரைப்படம் ‘டெவிலன்’

ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர். ’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 29 மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் மே 30 மாலை 3 மணி வரை நடைபெற்றது. 3 மணி முதல் படத்தின் மற்ற பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.*******

’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார். ஒலி வடிவமைப்பாளராக கரண் மற்றும் ஷிபின் பணியாற்றுகிறார்கள். பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.