கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை

ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வெண்கலச் சிலை திறக்கப்படும் செய்தியை திரு. TPV கருணாகர ராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது. எனது தென்மாவட்டசுற்றுப்பயணத்தின் போது அந்தச் சிலையின் முன் பிரச்சாரம் செய்தது நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் காமராஜர் கால் படாத ஊர் இல்லை. அலுவல் பணியாக அவசரமாகச் செல்கையிலும்  கிராமங்களில்  ஏழை எளிய மக்களைப் பார்த்தால், நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா என்பதை நேரில் பேசிஉறுதி செய்கிற தலைவராக இருந்தார்.

தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் அவர் காட்டிய அக்கறைதான் இன்று நாம் கண்டிருக்கிற. வளர்ச்சிகளுக்கான அச்சாரம். பதவியும் அதிகாரமும் ஒருவரின் தனிப்பட்ட சொத்தாக இருக்க முடியாது எனஅறிவித்து தன் பதவியைத் துறந்து களப்பணியில் ஈடுபட்டு இந்தியாவிற்கே ஒரு புதிய வழிகாட்டியாக ஆனவர்காமராஜர்.

எளிமை, நேர்மை, தூய்மை, தியாகம், தொண்டு, கடமையுணர்ச்சி ஆகிய விழுமியங்களின் உன்னத. அடையாளமாக விளங்கியவர் காமராஜர்.

காமராஜர் வருகிறாரென்றால், என் அப்பா துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பின்னே ஓடுவாரென பலமேடைகளில் சொல்லி இருக்கிறேன். அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார், என் அப்பா வணங்கும்ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதெங்கள் குடும்பப் பெருமை. அத்தனை முரண்பாடுகளையும் மீறிகாந்தியின் மீது அப்பழுக்கற்ற பற்று வைத்திருந்தார். அந்த வகையில் நானும் காமராஜரும் ஒருசாலைமாணாக்கர் என்பதென் தனிப்பெருமை.

காமராஜர் எனும் மகத்தான மனிதரை அறிந்து  கொள்ளவும், புரிந்துகொள்ளவும், போற்றிப் புகழவும்  செய்யக்கூடிய எந்த முயற்சியும் பாராட்டுக்குரியதே. இன்றைய தலைமுறைக்கு அவரைக் கொண்டு சேர்ப்பது நம்கடமை. அதைச் சரியாக செய்யும் ஆலங்குளம் பகுதி மக்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்.

மிக்க அன்புடன்,

கமல்ஹாசன்.