தியாக தீபம்` திலீபன் அவர்களின் தியாகத்தின் உயர்வை நமது இளைய தலைமுறையினர் ஊடாக பல தலைமுறைகளுக்கு காவிச் செல்லவேண்டும்“ மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு

தியாக தீபம் தியாகி திலிபன் அவர்களின் உயிர்த்தியாகம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை காலஞ் செல்லச் செல்ல எமது தமிழ்ச் சமூகம் மாத்திரமல்ல. உலகெங்கும் உள்ள பல மொழி பேசுகின்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பலர் நான்கு திசைகளிலும் பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தளவில் தியாக தீபம் அவர்களின் தியாகத்தை மேலும் உலகம் அறியச் செய்யும் வகையில் நாம் எமது தமிழ் இளைஞர்கள் கையில் அவரது நினைவேந்தல் நிகழ்வுகளை ஒப்படைக்க வேண்டும். எமது இளைஞர்கள் பலர் திலீபன் அவர்களது தியாகத்தின் பெருமையையும் வலிமையையும் புகழந்து பாடல் பாடல்களை நினைவேந்தல்களில் உணர்வோடு பாடுகின்றார்கள். அந்த தியாக பற்றிய உரைகளை நேர்த்தியாக ஆற்றுகின்றனர். எனவே அவ்வாறான இளைஞர்களே எமது அடுத்த தலைமுறைகளுக்கு `தியாக தீபம்` திலீபன் அவர்களின்நினைவுகளையும் அவரது தியாக சிந்தையும் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லக்கூடியவர்கள். எனவே நாம் இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாக கைகளில் எடுத்துக் கொண்டு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எமது தமிழீழ மண்ணில் உதித்து தனது உயிரைத்தியாகம் செய்த அந்த மாவீரனின் நினைவின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்“

இவ்வாறு மிசிசாகா மாநகரில் கடந்த 26-09-2025 அன்று வெள்ளிக்கிழமை காலை BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் தனது அலுவலக வளாகத்தில் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் பிரதான உரையாற்றிய ஊடக நிறுவனத்தின் BEHIND ME INTERNATIONAL MEDIA INC அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்புவிடுத்தார்.

அன்றைய தினம் ஸ்காபுறோ மற்றும் பிரம்ரன் மிசிகாகா ஆகிய இடங்களிலிருந்து பல உணர்வாளர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் அங்கு சமூகமளித்தனர்.

முதலில் கனடிய தேசியக் கொடியை னேந்திரன் செல்வராஜா அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர் ஒருவரின் தாயாரும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து உள்ளக மண்டபத்தில் தொடர்ச்சியாக பல நினைவு உரைகளும் ஒளிப்படக் காட்சியும் இடம்பெற்றன.

அங்கு உரையாற்றி கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவருமான லோகன் லோகேந்திரலிங்கம் உரையாற்றுகையில்

“ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அரசியல்துறை பொறுப்பாளராகவும் போராட்டக் களங்களில் தோள்களில் துப்பாக்கிகளோடு போராளியாகத் திகழ்ந்தவருமான திலீபன் அவர்கள் தனது தியாகத்தின் பின்னர் அவர் ஒரு தியாகியாகவும் மாவீரராகவும் பெருமையுடன் அழைக்கப்பெற்றாலும் தனது உயரிய தியாகத்தின் மூலம் திலீபம் என்னும் விடுதலைப் போராட்டக் கோட்பாட்டையும் தோற்றுவித்துள்ளார். அத்துடன் அவரது தியாகம் என்பது ஒரு சாதாரண இழப்பு அல்ல. அந்த அர்ப்பணிப்புள்ள இறப்பினை நாம் நினைவேந்தல்களின் மூலம் வருடாந்தம் கொண்டாடும் நிலையிலும் அவரை போற்றுவதிலும் அவரது நினைவேந்தல் நிகழ்வு தற்போது ஒரு போராட்டத்தின் ஆயுதமாகவே விளங்குகின்றது. ஏனென்றால் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் வருடாந்த தியாக தீபம் திலீபன் நினைவு நாட்கள் 12 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகையில் நடுக்கமுறுகின்றார்கள்“ என்றார்.

அங்கு திலீபன் அவர்கள் தனது உயிரை யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகம் செய்த கடைசி மணித்தியாலங்கள் அடங்கிய ஒளிநாடா ஒன்றையும் BEHIND ME INTERNATIONAL MEDIA INC நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் தயாரித்து காட்சிப்படுத்தினர். மேலும் பல உணர்வாளர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு உரையாற்றினர்.

படங்களும் செய்தியும்:- சத்தியன்