மதத்தினாலோ, நிறத்தினாலோ, மொழியினாலோ, ஜாதியினாலோ, தேசத்தினாலோ மனிதன் வேறுபடலாகாது. – பால் உப்பாஸ் என். லாறி

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்த சர்வ சமய மாநாட்டினை மனுஜோதி ஆசிரமத்தில் எல்லா மதத்தினரையும் அழைத்து நடத்த ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து என்னுடைய தந்தை திரு. தேவ ஆசீர் லாறி அவர்களும், அவருடைய குடும்பத்தினராகிய நாங்களும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இந்த விழாவின் மூலமாக கடவுள் ஒருவரே, மக்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து மத உணர்வுகளை களைந்து, மதமற்ற மனிதர்களாக அந்த ஒரே இறைவனைப் பின்பற்ற வேண்டும். அவரையே வணங்க வேண்டும் என்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணாணாவின் உயரிய எண்ணத்தை வெளிப்படுத்துகின்றோம்.

முதலாவதாக இந்த விழாவானது எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது பற்றி சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன். 1969-ம் ஆண்டு மனிதன் சந்திரனில் முதன் முறையாக காலடி வைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக,  ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் விஸ்வரூபத்தைக் கண்டார்கள். இந்த நிகழ்வைக் கண்டவர்கள் அவர் மனிதன் அல்ல, மானிட வடிவில் வந்த இறைவன் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அன்றைய காலகட்டத்தில், மனித வரலாற்றில் மனிதன் சந்திரனில் காலடி வைத்தது அறிவியல் உலகின் உயரிய சிகரமாகக் கருதப்பட்டது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையை கடந்தபோது, பரம்பொருளானவர் ஒரு மனிதனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது ஆன்மீக உலகின் சிகரமாக விளங்குகிறது. இந்த ஆன்மீக நிகழ்வினை உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாகவே ஆண்டு தோறும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் ஜூலை மாதம் 21-ம் நாள் மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழாவாக கொண்டாடத் தொடங்கினார். திரு. கிருபானந்த வாரியார், பிரபல இஸ்லாமிய பாடகரான நாகூர் அனிஃபா மற்றும் பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் வந்து உரையாற்றி இருக்கிறார்கள். இங்கு நடத்தப்படும் விழாவில் இந்து வேதங்கள், திருக் குர் ஆன், பைபிள் மற்றும் அனைத்து வேதங்களில் இருந்து சொற்பொழிவாற்றலாம் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே கூறி இருக்கின்றார்.

இறைவனால் மனிதர்களாகப்பட்ட நாம் இந்த உலகத்தில் நமக்காக எதைத் தேட வேண்டும் என்ற ஆன்மீக சிந்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் போத்தலூர் வீரபிரம்மன் என்பவரைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவருடைய பிரதான சீடரான சித்தப்பா உலக பந்தங்களில் இருந்து தன்னை எவ்விதமாக விடுவித்துக் கொண்டார் என்றால், ஒருமுறை தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணுடன் திருமணத்திற்கான பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அவருடைய பார்வையில் ஒரு மரித்த மனிதனின் சடலம், ஒரு வியாதியஸ்தன், ஒரு வயோதிகன் போன்றவர்கள் தென்பட்டனர். இதைப் பார்த்தவுடன் தன் பக்கத்தில் இருந்த மணமகளை மறந்து, மனிதன் இறப்பதற்கும், கிழவனாக ஆவதற்கும், நோயாளியாக துன்பத்தை அனுபவிப்பதற்காகவுமா பிறக்கின்றானா? என்ற சிந்தனை உருவானது. இதைத் தவிர இந்த மனிதப் பிறவியில் ஏதாவது சிறப்பு இருக்கின்றதா என்ற எண்ணம் வலுவடைந்தது. தன்னுள் இருக்கும் ஆன்மா எதையோ தேடுவதாக உணர்ந்தார். இந்த உலகத்தில் இருந்து விடுதலை பெற வழி என்ன என்று சிந்திக்கும்போது இவருக்கு முன்னால் ஒரு ஒளியானது அவரை வழி நடத்துவதைக் கண்டார். அந்த ஒளியானது அக்காலத்து கடவுளின் தீர்க்கதரிசியான வீரபிரம்மனிடம் அழைத்துச் சென்றது. இறைவனால் பிறப்பிக்கப்பட்ட நாம் உலகத்தில் பற்றை விட்டுவிட்டு, நாம் எதற்காக பிறந்தோம்? கடைசியாக நாம் எங்கு சேருகின்றோம்? என்ற சிந்தனை நம்மிடம் வரும்போது அது நம்மிடம் வழிநடத்திச் செல்கிறது.

உதாரணமாக சிறு கதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு முறை ஒரு ராஜா தனது ராஜ்ஜியத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.  நாளை காலை, என் அரண்மனையின் பிரதான கதவு ராஜ்ஜியத்தில் உள்ளவர்களுக்காக திறக்கப்படும். நாளை ஒருவர் எதைத் தொட்டாலும் அது அவருக்கு சொந்தமாகி விடும். இந்த அறிவிப்பைக் கேட்டதும், எல்லோரும் தங்களுக்குள் நான் மிகவும் விலையுயர்ந்த பொருளைத் தொடுவேன் என்று பேசத் தொடங்கினர். சிலர், நான் தங்கத்தைத் தொடுவேன் என்று சொன்னார்கள். வேறு சிலரோ விலையுயர்ந்த நகைகளைத் தொடுவது பற்றிப் பேசினர். மறுநாள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், அரண்மனையின் பிரதான கதவு திறக்கப்பட்டது. வாயில் திறந்தவுடன், அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி ஓடத் தொடங்கினர். அனைவரும் தங்களுக்குப் பிடித்தமான பொருளை முதலில் தொட அவசரப்பட்டனர். ராஜா தனது இடத்தில் அமர்ந்து அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து சலசலப்புகளையும் பார்த்து, தனக்குள் சிரித்துக் கொண்டார்.

அதே நேரத்தில், அந்தக் கூட்டத்தில் ஒருவர் நேராக ராஜாவை நோக்கி நடக்கத் தொடங்கினார். மெதுவாக ராஜாவின் அருகில் வந்து அவரைத் தொட்டார். அவர் ராஜாவைத் தொட்டவுடன், ராஜா அவருடையவராக ஆனார். ராஜாவுக்குச் சொந்தமான அனைத்தும் அவருடையதாக மாறியது. அந்த உரிமையை பெற்றுக் கொண்டார். மற்றவர்கள் ராஜாவுக்கு பதிலாக வைரங்கள், தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைத் தொட்டனர்.

இதேபோல், உலகைப் படைத்தவர் நமக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தினமும் அளிக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக, அந்த ராஜ்ஜியத்தைச் சேர்ந்த மக்கள் செய்த அதே தவறை நாமும் செய்கிறோம். கடவுளைத் தொடுவதற்கு பதிலாக, பணம், புகழ், பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றைத் தொட விரும்புகிறோம். உலகம் முழுவதையும் படைத்த அந்த மகத்தான கடவுளை முதன்மையானவராக தேர்ந்தெடுப்பதில்லை. எனவே இந்த உலகத்தின் கஷ்டங்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுளை நாம் முதன்மையானவராக தேர்ந்தெடுத்தால் உலக கஷ்டங்களில் இருந்து இலகுவாக நம்மைப் படைத்த இறைவனை அடையலாம்.

இந்த உலகத்தில் நாம் நிறந்தரமானவர்கள் அல்ல. ஒரு வழிப்போக்கனைப் போல வந்து செல்கிறவர்களாக இருக்கிறோம். இந்த விழாவில் தங்குவதற்காக கூடாரங்கள் அமைத்து நாம் இந்த உலகத்தில் நிரந்தரமானவர்கள் அல்ல என்பதை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம். உலகத்திலிருந்து வைகுண்டலோகத்திற்கு செல்ல இறைவன் ஒருவரே ஏணிப்படியாக இருக்கிறார். அந்த இறைவனை முழு மனதுடன் போற்றித் துதித்து பாடுவதே நம்முடைய கடமையாக இருக்கின்றது.  இசை என்பது நம் அனைவரையும் இணைக்கின்ற உலகப் பொது மொழியாக இருக்கிறது என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்கள். எனவே நாங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் இறைவனை மேன்மைப்படுத்தும் பாடல்களை இயற்றி அதை இசை ஆல்பங்களாக மாற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம். இன்று Shree Lahari Krishna Praising Song – Vol 2  என்ற ஆங்கில பாடல்களை வெளியிட இருக்கிறோம். முதல் வால்யூம் 5 வருடங்களுக்கு முன்னர் வெளியாகியது. அமெரிக்காவிலுள்ள பக்தர்கள் பாடி இருக்கிறார்கள். ஏழு பாடல்கள் வெளியாகிறது. ஆன்லைனில் Spotify, Jiosaavan, Itune,  youtube Music வெளியிடுகின்றோம். இந்த பாடல்கள் வாயிலாக தெய்வீக அருளை அடையலாம் என்பதனை தெரியப்படுத்துகின்றோம். தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் குறையாது பார்த்துக்கொள்ள வேண்டும். அதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை மனுஜோதி ஆசிரமமானது உலகிற்கு எடுத்துரைக்கிறது. அதற்காகத்தான் இந்த மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் ஒரு பயிற்சிக் கூடமாக நிறுவினார்கள்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாணா அவர்களின் சொற்பொழிவுகளை நாங்கள் புத்தகங்களாகவும், பாடல்களாகவும் உலக மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றோம். ஒன்றே குலம் – ஒருவனே தேவன் என்பதை இவ்வுலகிற்கு அறிவித்து வருகின்றோம். மதத்தினாலோ, நிறத்தினாலோ, மொழியினாலோ, ஜாதியினாலோ, தேசத்தினாலோ மனிதன் வேறுபடலாகாது. இறைவனின் பார்வையில் நாம் அனைவரும் அவரின் பிள்ளைகள் என்பதை உணர்த்தவே இந்த சர்வ சமய மாநாடு நடைபெறுகின்றது.