ஏ.குரு இயக்கத்தில் சோனியா அகர்வால் குட்டிபுலி சரவணன், திலிப்ஸ், வர்ஷிட்ட சுகண்யா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பருத்தி”. சாதிய பாகுபாடுகள் நிறைந்த ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிவா என்ற திலீப்ஸ் தனது பாட்டி மற்றும் அண்ணனுடன் வாழ்கிறார். அவருடைய அண்ணன்தான் வெளியூர் சென்று உழைத்து, சம்பாதித்து பணம் அனுப்புகிறான். பள்ளியில் அவனுடைய வகுப்பு தோழியாக இருக்கும் மதி என்ற சிறுமி உயர் ஜாதியை சேர்ந்த ஊரின் பெரும் புள்ளியின் மகள். இவர்கள் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே மிக நெருங்கிய நண்பர்களாக பாசமாக பழகி வந்தனர். இப்பொழுது இருவரும் இளமை வயதுக்கு வந்த பின்பு அவருடைய நட்பு காதலாக மாறியிருக்கிறது. இவர்களுடைய நட்புக்கும் காதலுக்கும் மதியின் பாட்டி கடுமையாக எதிர்க்கிறார். அவர் வேறொரு சாதியைச் சேர்ந்தவர்களை தன் வீட்டுக்குள்கூட விடக்கூடாது என்று சொல்பவர். மதியின் தாத்தா அந்த ஊரின் மிகப் பெரிய மனிதர். சாதி வெறி பிடித்தவர்தான். ஊரில் ஜாதி விட்டு ஜாதி காதல் செய்த காதலர்களை அந்த உயர் சாதி தலைவர் தன்னுடைய அடியாட்களை வைத்து படுகொலை செய்து அந்தக் காதலியையும் பாலியல் வன்கொடுமை செய்ய வைக்கிறார். அப்பேர்ப்பட்டவர் தன்னுடைய பேத்தி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனை காதலிப்பதால் கொதித்து எழுகிறார். அதே சமயம் அதே ஊரில் கூலி வேலை செய்து வரும் ‘கன்னியம்மா’ என்ற சோனியா அகர்வால்தான் தன்னை பெற்றெடுத்த தாய் என்பதை கண்டறிகிறார் திலீப்ஸ். சோனியா தன் மகனை பாசத்துடன் பழக நினைக்கும்போது மகன் அவளை உதாசீனப்படுத்திவிட்டு போகிறான். ஒரு பக்கம் மதியுடன் காதல் தொடர முடியாமல் இருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய அம்மா இதே ஊரிலேயே தனித்து வாழ்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான் திலீப்ஸ். இறுதியில் என்ன நடந்தது? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? சோனியா அகர்வாலுடன் மகன் இணைந்தானா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சாதிய ஏற்றத்தாழ்வுகளுடன், காதலையும் சேர்த்து அதனுடன் தாய் பாசத்தையும் சொல்லி தாய் செய்த கள்ளக் காதல் அவருடைய வாழ்க்கையை எப்படி அழித்தது என்பதையும் சுட்டிக்காட்டி ஒரு கிராமத்து வாழ்வியலை நம் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். கதையாக சொல்லும்பொழுது இந்த படம் நிச்சயம் சினிமாவுக்கு ஏற்ற கதைதான் என்றாலும், அதை நமக்கு வழங்கியவிதத்தில் இயக்குநர் பெரும் சோதனைதான் செய்திருக்கிறார். கதாநாயகனாக நடித்த திலிப்ஸும், நாயகியாக நடித்த வர்ஷித் சுகன்யாவும் ஒரு கிராமத்து காதலர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே இதிலும் காட்டப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றாலும் இயல்பான நடிப்பையே காண்பித்து இருக்கிறார்கள். சோனியா அகர்வாலுக்கு இந்தப் படத்தில் அதிக வேலை இல்லை. ஆனால் அவர்தான் கதாநாயகனின் தாய் என்பது போலவே இந்தப் படத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அதனாலேயே அவரை நம்பி வந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். மேலும் குட்டிப்புலி சரவணன் மற்றும் மதியின் அப்பா, அம்மாவாக நடித்தவர்கள், சுகன்யாவின் பாட்டியாக நடித்த அந்த ஜாதி வெறி பிடித்த ஒரு கிழவி, மதியின் தாத்தா என்று பலரும் ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள். ராஜேஷின் ஒளிப்பதிவு அந்தக் கிராமத்து அழகையும், கிராமத்து மனிதர்களின் இயல்பான உறவுகளையும் அப்படியே காண்பித்து இருக்கிறார். அஜித் வாசுதேவன் இசையில் பாடல்கள் வழக்கம் போல ஒரு முறை கேட்கலாம் போல் இருந்தாலும் பின்னணி இசை நாடகத்தனமாக அமைந்தது படத்திற்கு பெரிய பின்னடைவு. தாய் மீதான பாசம், திருமணமான தம்பதிகளுக்குள் நடக்கும் மோதல்கள், இதன் விளைவாக பிறக்கும் கள்ளக் காதல், குழந்தைகளை பரிதவிக்கவிட்டு ஓடிவிடும் தாய்களும் தகப்பன்களும், தீண்டாமையால் பெரிதும் பாதிக்கப்படும் கிராம மக்கள், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்கின்ற பிரிவினையால் சந்தோஷப்படும் அரசியல் அல்லக்கைகள், சாதி வேற்றுமையால் பாதிக்கப்படும் இளம் காதலர்கள் என்று பல்வேறு கிளை கதைகளை வைத்து இந்தப் படத்தை இயக்குநர் கொண்டு வந்திருந்தாலும்… அதை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கொடுத்திருப்பதால் சுவாரசியமே இல்லாமல் இந்தப் படம் வந்துள்ளது. பருத்தி வெடித்து பஞ்சாகவில்லை.
பருத்தி திரைப்படம் விமர்சனம்
